22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் நீதித்துறைக்கு ஆபத்தெதுவும் வராதென ஐ.நா.வுக்கு உறுதி

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் மார்க்ரெட் சாட்டர்த் வைட் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை அரசாங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள இலங்கை நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தின் ஊடாக கடந்த 21ஆம் திகதி இந்த உத்தியோகபூர்வ பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிலில் இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பிரதான நோக்கம், நீதிமன்றங்களில் அதிகளவிலான வழக்குகள் தேக்கமடைதல் மற்றும் வழக்குகள் தாமதமாவதைக் குறைத்து, மக்கள் நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதாகும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்மொழியப்பட்ட புதிய திருத்தத்திற்கு அமைய, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் கட்டாய ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆக அதிகரிக்கப்படும். பிரதம நீதியரசரின் பதவிக்காலம் 7 வருடங்கள் அல்லது அவருக்கு 67 வயது பூர்த்தியடைதல் ஆகிய இரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அந்த சந்தர்ப்பத்தில் முடிவடையும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆக அதிகரிக்கப்படுவதுடன் பிராந்திய அமர்வுகளை நடத்துவதை இலகுபடுத்தும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கை 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேபோன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆக அதிகரிக்கப்படுவதுடன், அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து கீழ் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் கட்டாய ஓய்வுபெறும் வயது 62 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தமானது எவ்விதத்திலும் நிறைவேற்று அதிகாரத்தின் செல்வாக்கின் அடிப்படையிலோ அல்லது அரசியல் இலாபம் பெறும் நோக்கிலோ தயாரிக்கப்படவில்லை என அரசாங்கம் தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச தரங்களுக்கு அமைய ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு தடையாக அமையாது எனவும், நிறைவேற்று அதிகாரம் தனக்கு விருப்பமான வகையில் தனிப்பட்ட நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பதற்கு இதன் மூலம் எவ்வித வாய்ப்பும் கிடைக்காது எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு அரசாங்கம் முழுமையாக மதிப்பளிக்கும் எனவும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()