எமது மக்களை தந்திரமாக ஏமாற்றி வட-கிழக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீனா சதி; ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவிப்பு

தமிழீழ தனி அரசு சம்பந்தமான ஒரு ஆய்வினை இங்கே கொண்டுவரப்போகிறோம் என்று சொல்லி, எமது மக்களை ஏமாற்றி வடகிழக்கு பகுதியை சீனா ஆக்கிரமிப்பதாக இருந்தால், அது மிகவும் ஒரு ஆபத்தான விடயமாக அமையும். எமது தாயகப் பகுதி எமது கையில் இருந்து வெளியேற்றப்படுமென ஜனநாயக போராளிகள் கட்சியின் கதிர் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது கதிர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டுகளில் சீனா அரசாங்கம் வர்த்தக ரீதியாகவும், அபிவிருத்தி எனவும் எமது தாயகப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் திட்டங்களை இங்கே கொண்டுவந்தது. அது எம்மால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் இரகசியமான முறையில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்திற்குள்ளும் ஏனைய சமூகங்களுக்குள்ளும் ஊடுருவி, இன்று வட மாகாணத்தில் அரைவாசி அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்ட நிலை இங்கே உருவாகியிருக்கின்றது.
இந்தச் செய்திகள் என்பது மக்களுக்குத் தெரியாமல் இருட்டடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. அதைத் தாண்டியும் அரசியல் ரீதியாக எமது மக்களுக்கு ஒரு தீர்வை வழங்கப்போவதாகக் கூறி சீனா ஒரு ஆய்வினை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
சீனாவினுடைய இந்த ஆய்வுக் குழுவுடன் நாடு கடந்திருக்கும் முக்கிய தமிழ் அமைப்பும் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் அங்கே நடந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது . அவ்வாறு எமது மக்களுக்கு தமிழீழ தனி அரசு சம்பந்தமான ஒரு ஆய்வினை இங்கே கொண்டு வரப்போகிறோம் என்று கூறி, எமது மக்களை ஏமாற்றி சீனா வடகிழக்கு பகுதியை ஆக்கிரமிப்பதாக இருந்தால், அது மிகவும் ஆபத்தான விடயமாக அமையும். எமது தாயகப் பகுதி எமது கையில் இருந்து வெளியேற்றப்படும்.
அதற்குப் பிறகு தமிழர்கள் இலங்கை நாட்டில் வாழ்வதற்கான எந்த சாத்தியங்களும் இருக்காது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதற்குள்ளே பல உண்மையான விடயங்கள் இருக்கின்றன. நாங்கள் அந்த விடயங்கள் தொடர்பான தகவல்கள் சேகரித்துக்கொண்டிருக்கின்றோம்.
எதிர்காலத்தில் அந்த விடயங்களை நாங்கள் மக்களுக்கு விபரமாகச் சொல்ல இருக்கின்றோம். அந்த விடயங்கள் தொடர்பாகவும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை இந்த இடத்திலே தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் – என்றார்.
![]()