உலகம்

கடும் பொருளாதார நெருக்கடி: ஒப்புக்கொண்டது ஈரான்

அமெரிக்காவுடனான போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை ஈரானிய தலைவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

மக்களின் பொருளாதார கஷ்டங்களுக்குத் தீர்வு காணுமாறு அந்நாட்டின் உச்ச தலைவர் அரசாங்கத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் தடைகள் மற்றும் முற்றுகை காரணமாக நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஈரான், அமெரிக்காவின் அழுத்தங்களை எதிர்கொள்ளப் போவதாகவும், இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்வதோடு, உலகளாவிய எரிசக்தி சந்தையைக் கட்டுப்படுத்தும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளது.

தடைகள் மற்றும் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதே முக்கிய இலக்கு என அரசு ஊடகங்கள் மூலம் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், சந்தைகளை நிர்வகித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உள்நாட்டு உற்பத்தியை நோக்கி முதலீடுகளைத் திருப்புதல் மற்றும் அமெரிக்க டாலருக்கான சார்புநிலையைப் படிப்படியாகக் குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரைத் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையில் முடிந்துள்ளன.

இதனிடையே, டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் “பொருளாதார டி-டே” (economic D-Day) என்ற பெயரில் ஈரானை நிதி ரீதியாகத் தண்டிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் பொருளாதாரம் மீது தீவிரமடையும் தடைகள்

ஈரானுடனான வணிகத் தொடர்புகளைத் துண்டிக்குமாறும், தவறினால் இரண்டாம் நிலைத் தடைகளை (secondary sanctions) எதிர்கொள்ள நேரிடும் என்றும் வோஷிங்டன் ஏனைய நாடுகளை எச்சரித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளான சீனா மற்றும் இந்தியா மீது அமெரிக்க நிதியமைச்சகம் உடனடித் தடைகளை விதிக்கவில்லை.

ஈரானுடன் வணிகம் செய்ததற்காக எகிப்தின் ‘பேங்க் மிஸ்ர்’ (Banque Misr) வங்கி மீது அமெரிக்க நிதியமைச்சகம் தடைகளை விதித்துள்ளதுடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அவ்வங்கியின் கிளைகள் டாலர் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதைத் தடுக்கும் விதியை முன்மொழிந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button