போராளிகளின் அரசியல் கட்டமைப்பை பிரிக்க சில அரசியல்வாதிகள் முயற்சி; ஜனநாயக போராளிகள் கட்சியின் கதிர் தெரிவிப்பு

போராளிகளுக்கு என்று ஒரு அரசியல் கட்டமைப்பு இருக்கிறது. அந்த அரசியல் கட்டமைப்பை பலப்படுத்தி வேலை செய்வதற்கு முன்வருவதைத் தவிர, அதைப் பிரிப்பதற்கான வேலையை எவரும் செய்யக்கூடாது. இது இங்கே மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகக்கூட பல நாடுகளின் பின்னணிகளோடு போராளிகளை களத்தில் இல்லாமல் தூக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் கதிர் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது கதிர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய போராளிகளை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டுவருவதாகக் கூறி, சில தமிழ் அரசியல்வாதிகள் அவர்களுக்குள் பல பிரிவினைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். அது கடந்த காலங்களில் நாங்கள் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கிற விடயமாக இருக்கின்றது.இந்தக் கருத்துக்கள் என்பது எங்களுடைய கருத்து என்பதைத் தவிர, மக்களுடைய கருத்துக்களாகவும் இருக்கின்றது. அண்மையில் நான் மக்களை சந்தித்தபோது, இவ்வாறான விடயங்கள் எதற்காக நடக்கிறது?” என கேட்டார்கள்.
ஜனநாயக அரசியல் என்பது போராளிகளை தற்போது அந்த நிலைமைக்கு கொண்டுவர வேண்டிய தேவை யாருக்குமே கிடையாது. ஏனென்றால், 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியிலே யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னரே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு அரசியல் இயக்கமாக பரிணாமம் பெற்றது.
அந்த விடயம் என்பது தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு விடயம். அந்த வகையிலே தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அந்த விடயத்தையும் ஒரு சர்வதேச ஊடகத்துக்குச் சொல்லியிருந்தார்.
“நமது போராட்டம் என்பது அரசியல் ரீதியான ஒரு போராட்டமாகத்தான் இனி தொடரும்” என்பதையே அவர் சொல்லியிருந்தார். நடேசன் அண்ணனுடைய தலைமையிலே எமது போராளிகள் ஒரு ஜனநாயக அரசியலுக்குள் தயார்படுத்தப்பட்ட நிலையில்தான் எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. இன்று புதிதான ஒரு விடயத்தை ஆரம்பம் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை. நடேசன் அண்ணனுடைய தலைமையிலே உருவாக்கப்பட்ட எமது அரசியல் கட்டமைப்பு, நம்பிக்கை துரோகங்களாலும் சில காட்டிக்கொடுப்புகளாலும் அழிக்கப்பட்டதன் பின்னர், அந்த விடயங்களை போராளிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.
இங்கே களத்திலே வந்து 10 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை ஒருங்கிணைந்து ஒரு அரசியல் கட்டமைப்பை வழிநடத்தி வருகின்றார்கள். இந்தச் சூழலில், அந்த அரசியல் கட்டமைப்பை சிதைப்பதற்கும் அதை உடைப்பதற்கும் திட்டங்களைப் போட்டு எமது அரசியல் தலைவர்கள் சிலர் செயல்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அந்த அடிப்படையிலே, அண்மையில் நடந்த போராளிகளுக்கான ஒன்றுகூடல்களுக்கு போராளிகளும் மாவீரர் குடும்பங்களும் பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டு அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
வாழ்வாதாரம் தருவதாகவும், சுமந்திரன் அண்ணனோடு போனால் உங்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் சொல்லி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, அவருடன் நின்றவர்கள் அந்த ஒன்றுகூடலை ஏற்படச் செய்திருந்தார்கள். அதற்குப் பின்னர் அந்த ஒன்றுகூடலுக்கு சென்று வந்த போராளிகளிடம் பேசியபோது அவர்கள் இதனைச் சொன்னார்கள்.
உண்மையிலே தமிழ் அரசுக் கட்சியினுடைய செயலாளர் சுமந்திரன் ஒரு சட்டத்தரணி. அவருக்கு ஜனநாயக ரீதியிலான செயல்பாடுகள் அனைத்தும் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தெரியும். அந்த வகையிலே இவ்வாறான அத்துமீறிய செயல்பாடுகளை போராளிகளாகிய நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இதேபோன்று சில போராளிகளை ஒன்றுதிரட்டி வேறு சக்திகள், அதாவது உண்மையிலேயே எமது இயக்கத்தினுடைய ஒரு முன்னாள் தளபதியாக இருந்து பின்னர் வெளியேற்றப்பட்ட ஒரு நபர், தளபதி ஜேம்ஸ் என்று சொல்லப்படுபவர், “புனித பூமி” என்று சொல்லி ஒரு கட்சி ஒன்றை ஆரம்பித்து, அவர் ஒரு விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கின்றார்.
அவரது விளையாட்டு என்பது மிக மோசமான விளையாட்டாக இருக்கின்றது. அந்த விஷயங்களையும் நாங்கள் அவருக்குத் தெளிவாகச் சொல்கிறோம்: “இந்தச் சேட்டைகளை நீங்கள் இங்கே செய்யாதீர்கள். ஏனென்றால் உங்களது காலத்தில், நீங்கள் போராட்ட காலத்தில் உங்களது நிலைமைகள் நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் என்பதை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.” அந்த விஷயங்களையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த விடயங்கள் தொடருமாக இருந்தால், உங்கள் மீதான சில விடயங்களை நாங்கள் வெளியில் கொண்டுவருவோம் என்பது உங்களுக்குத் தெரியும். அதையும் நீங்கள் கருத்தில் கொண்டு செயல்படுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இதேபோன்று ஈஸ்வரன் என்று சொல்லப்படுபவர் ஒரு மூத்த போராளி. அவரும் இவ்வாறான பிரிவினைகளைத்தான் இங்கே ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார். “போராளிகள் நலன்புரிச் சங்கம்” என்று சொல்லி ஒரு சங்கத்தை வைத்திருக்கின்றார், அதில் பிரச்சனையில்லை. நீங்கள் அந்தப் போராளிகளுக்கான உதவிகளை அந்தச் சங்கத்தின் ஊடாகச் செய்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
அதன் ஊடாக ஒரு அரசியல் கட்சியை இங்கே உருவாக்குவதற்கான திட்டங்களை செய்ய வேண்டாம். அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்.
போராளிகளுக்கு என்று ஒரு அரசியல் கட்டமைப்பு இருக்கிறது. அந்த அரசியல் கட்டமைப்பை பலப்படுத்தி வேலை செய்வதற்கு முன்வருவதைத் தவிர, அதைப் பிரிப்பதற்கான வேலையை நீங்கள் செய்யாதீர்கள். இது இங்கே மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகக்கூட பல நாடுகளின் பின்னணிகளோடு இன்றைக்கு “போராளிகள்” என்ற விஷயத்தை இங்கே களத்தில் இல்லாமல் தூக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றது என்பதையும் நாம் அறிந்திருக்கின்றோம்.
அந்த விடயங்கள் தொடர்பாகவும் எதிர்வரும் காலங்களில் நாங்கள் மக்களுக்குச் சொல்ல இருக்கின்றோம். இந்த விஷயத்தில் அனைவருமே தெளிவாக இருங்கள். போராளிகளுக்கு நாங்கள் ஒரு விஷயத்தைச் சொல்கிறோம்: உங்களுக்கான அரசியலை நீங்கள் கையில் எடுங்கள். உங்களுக்கான அரசியலை நீங்கள் கைவிடுவீர்களாக இருந்தால், மற்றவர்கள் அந்த அரசியலைக் கையில் எடுத்து உங்களை அழிப்பதற்கு முயற்சி செய்வார்கள்.
ஆயுதப் போராட்ட காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருக்கு. எங்களது பலமிக்க ஒரு ஆயுதப் போராட்ட இயக்கத்தை அரசியல் ரீதியான ஊடுருவல்கள் மூலம் அது பிரிக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மண்ணிலே நாங்கள் நிலைபெறும் வரை, நாங்கள் பலம்பெறும் வரை, எமக்கான ஒரு அரசியல் தீர்வு என்பது சாத்தியமில்லை என்பதையும் நான் தெளிவாகச் சொல்கிறேன். இந்த அரசியல்வாதிகள் ஆண்டாண்டு காலமாக எமது மண்ணிலே எமது மக்களுடைய வீட்டு வாசல் வரைக்கும் வந்து, பாராளுமன்றங்களுக்குச் சென்று அவர்கள் பெரிய முழக்கங்களை இட்டாலும், பீரங்கிகளைப் போல அவர்களுடைய வார்த்தைகள் இருந்தாலும், இன்று வரைக்கும் எமது மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.
இந்த அரசியல்வாதிகளை நாங்கள் நம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, விடுதலைப் புலிகளுடைய அரசியல் கட்டமைப்பாகிய நாம், இந்த மண்ணிலே பலம்பெற்று, நிலைபெற்று, எமக்கான ஒரு நிலையான அரசியலை முன்னெடுக்கும் வரை எமக்கான தீர்வுப் பாதைகள் என்பது மூடப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். இதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் – என்றார்
![]()