இலங்கை

பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தி கைவிடப்படுமா?; தெற்கில் விட்ட தவறை வடக்கில் விட முடியாது!

காங்கேசன்துறை துறைமுகத்தையும் பலாலி விமான நிலையத்தையும் இன்னுமொரு மத்தள விமான நிலையமாகவும் இன்னுமொரு அம்பாந்தோட்டை துறைமுகமாகவும் உருவாக்க இயலாது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இந்திய அரசாங்கம் பெருந்தொகை நிதியைக் கொடுத்தும் அதை அபிவிருத்தி செய்யப் பின்வாங்குவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவொரு அரசாங்கமும் நமக்கு மானிய நிதியையோ அல்லது கடன் நிதியையோ வழங்கினாலும், அதைச் செயல்படுத்துவது அல்லது செய்யாமல் இருப்பது குறித்து அந்தப் பிராந்திய மக்களும், அதேபோல் இலங்கை அரசாங்கமும் தங்களிடம் உள்ள அடிப்படை தேசிய திட்டங்களுக்கு ஏற்பவே தீர்மானிக்க வேண்டும்.

இந்தியா துறைமுகத்தைக் கட்டுவதற்கு முன்மொழிந்தபோது, ஆரம்பத்தில் அது ஒரு கடன் நிதியாகவே இருந்தது. பின்னர் எங்கள் அரசாங்கம் வந்த பிறகே அது ஒரு மானியமாக மாற்றப்பட்டது. ஆனால், அந்த மானியத் தொகை துறைமுகத்தைக் கட்டி முடிப்பதற்கு போதுமானதாக இல்லை.

அதனால்தான் நாங்கள் ஒப்பந்தங்களை விரிவாக ஆய்வு செய்தோம். ஆய்வு செய்த பிறகு, அந்த ஒப்பந்தத்தில் மேலும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய சட்டப்பூர்வமான விடயங்களும் உள்ளன. அதேபோல் அந்த ஒப்பந்தத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும் பொருளாதாரத் தாக்கம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும். எளிமையாகச் சொன்னால், எனது நினைவின்படி 65 மில்லியன் டொலர் மானியம் வழங்கப்பட்டது. ஆனால், துறைமுகத்தைக் கட்டி முடிப்பதற்கு 90 மில்லியன் டொலர் முதல் 100 மில்லியன் டொலர் வரை செல்லக்கூடும். அப்படியென்றால் அந்த எஞ்சிய தொகையை இலங்கை அரசாங்கமே ஏற்க வேண்டும்.

அடுத்ததாக, இதைப் பராமரிக்க வேண்டும். பராமரிப்பதற்கு எங்களால் மேலும் ஒரு சுமையைச் சுமக்க முடியாது.

எனவே, இலங்கை அரசாங்கத்திற்கு இத்தகைய மானிய நிதி முக்கியமானதுதான். இப்போது இந்தியா நமக்கு தொடரூந்துப் பாதைக்காக மானிய நிதி வழங்கியது, நாங்களும் தொடருந்துப் பாதையைக் கட்டினோம். ஏனெனில் அங்கு ஏற்கனவே தொடருந்துப் பாதை இருந்தது. ஆனால், நாம் ஒரு துறைமுகத்தையோ அல்லது விமான நிலையத்தையோ கட்டும்போது, முழுமையான மானிய நிதி கிடைத்தாலும், அதற்குப் பிறகு அதனை எவ்வாறு பராமரிப்பது? எஞ்சிய நிதி எவ்வளவு தேவைப்படும்? என்பன போன்றவை குறித்துக் கவனம் செலுத்தியே செய்ய வேண்டியுள்ளது.

அதனால்தான், நான் துறைமுகங்கள் அமைச்சராக இருந்தபோதும் இது குறித்து ஆய்வு செய்தோம். அதனால்தான் மேலும் விரிவான ஆய்விற்காக அக்காலகட்டத்தில் துறைமுகங்கள் அமைச்சிடம் அதனை ஒப்படைத்தோம். இப்போது அதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என நினைக்கிறேன். எனவே, “மானிய நிதி கொடுத்தும் செய்யவில்லை” என்பதில் இன்னும் பூர்த்தி செய்யப்படாத விஷயங்கள் உள்ளன. மானிய நிதியைக் கொண்டு மட்டும் முழுமையாகத் துறைமுகத்தைக் கட்டிவிட முடியாது.

இரண்டாவது, இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பது கணக்கிடப்படவில்லை.

இந்தத் துறைமுகத்தைக் கட்டிய பிறகு, அதனைப் பராமரிப்பது பொருளாதார ரீதியாக எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும், தொடர்ந்து நடத்த முடியுமா என்பது குறித்து ஒரு வணிகத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

எனவே, இதுபோன்ற பல விடயங்கள் உள்ளன. நாங்கள் ஓர் அரசாங்கமாக உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுகிறோம். ஆனால், இலங்கையின் சட்டதிட்டங்கள் மற்றும் இலங்கையின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தே அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுகிறோம்.

இந்தியா எங்களுக்குக் கொடுத்த உதவி கிட்டத்தட்ட 65 மில்லியன் டொலர் என்று வைப்போம். ஆனால் அதைச் செய்து முடிப்பதற்கு 90 மில்லியன் டொலருக்கு மேல் செலவாகும். அப்போது அந்த காசை யார் கொடுப்பது? அப்படிப்பட்ட பிரச்சனையும் ஒன்று இருக்கிறது.

அது மாத்திரமல்ல, அதற்குப் பின் அவற்றை பராமரிக்க வேண்டும். அந்தப் பராமரிப்பை நாங்கள் பார்க்க வேண்டும். இன்னுமொரு மத்தளவாகவும் , இன்னுமொரு அம்பாந்தோட்டையாகவும் பலாலியையும் காங்கேசன்துறையையும் உருவாக்க இயலாது – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button