இலங்கை

தமிழரின் மனக்காயங்களுக்கு அதிகார அரசியலைத் தாண்டி அன்பே’ உண்மையான மருந்து!; யாழில் சந்திரசேகர் உருக்கம்

தமிழ் மக்களின் நீண்டகால வேதனைகளுக்கும், அவர்கள் சந்தித்துள்ள உளக்காயங்களுக்கும் அதிகார அரசியலையோ சலுகைகளையோ தாண்டி ‘அன்பு’ ஒன்றே உண்மையான மருந்தாக அமைய முடியும் என்று மீள்குடியேற்ற மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஏற்பாட்டில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் தேசிய நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2026 ஜூலை 31ஆம் திகதி வரை ஓ.எம்.பிக்குக் கிடைத்த மொத்த முறைப்பாடுகளில் 16 ஆயிரத்து 966 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தக்கூடியவை என அடையாளம் காணப்பட்டு, ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2027ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து ஆரம்பகட்ட விசாரணைகளையும் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நிதிப் பற்றாக்குறையால் தாமதமடைந்த விசாரணைகளுக்காக, தற்போதைய அரசு அமைச்சரவைப் பத்திரம் மூலம் 375 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 719 காணாமல் போனமைக்கான சான்றிதழ்களும், 409 மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

பலாலி மற்றும் குரும்பசிட்டி பகுதிகளில் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகள் உடனடியாக மீளளிக்கப்படுவதுடன், மக்கள் அங்கு வீடுகளைக் கட்டிக்கொள்ள முழுமையான அனுமதி வழங்கப்படவுள்ளது.

1981 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய சந்தை மதிப்பின்படி உரிய இழப்பீடும், கூடுதல் நஷ்டஈடும் வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.” – என்றார்.

தெற்கில் முப்படையினர் மற்றும் இளைஞர்கள் எதிர்நோக்கிய துயரங்களைப் போலவே, வடக்கு, கிழக்கிலும் தாய்மார்கள் முகங்கொடுத்துள்ள வேதனைகள் ஒட்டுமொத்த நாட்டின் பகிரப்பட்ட துயரம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழ் மக்களின் இதயக் காயங்களுக்கு அன்பும் நீதியும் மட்டுமே மருந்தாக இருக்க முடியும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், மாவட்ட செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வை முன்னிட்டு மருத்துவ மற்றும் சமூக சேவைகளை உள்ளடக்கிய நடமாடும் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button