மன்னார் ” படுக்கை” யில் கோடிக் கணக்கில் எண்ணெய், எரிபொருள்!; அகழ்வாராய்ச்சிக்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு

இலங்கை, மன்னார் படுக்கையில் (Mannar Basin) சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவை சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் பெட்ரோலிய அகழ்வாராய்ச்சிக்காக திறந்துள்ளது. இது நாட்டின் பயன்படுத்தப்படாத பரந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் குறித்த புதிய எதிர்பார்ப்புகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்ட “2026 இலங்கை பெட்ரோலிய அகழ்வாராய்ச்சி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் சுற்று” (2026 Sri Lanka Petroleum Exploration Licence Awarding Round) மூலம், மன்னார் படுக்கையில் உள்ள நான்கு அகழ்வாராய்ச்சிப் பகுதிகள் (Blocks) சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
தற்போதுள்ள புவியியல் தரவுகளின் அடிப்படையில், இந்தப் பகுதியில் சுமார் 2 பில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய்யும் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவும் காணப்படலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ ஆரம்ப விழா, தெமட்டகொடையில் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இலங்கை பெட்ரோலிய மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் தம்மிக தந்திரிகொட, பணிப்பாளர் நாயகம் கலாநிதி நீல் டி சில்வா, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி ராஜகருணா மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முந்தைய அகழ்வாராய்ச்சிகளின் மூலம் மன்னார் படுக்கையில் இயற்கை எரிவாயு மற்றும் திரவ ஹைட்ரோ கார்பன்கள் இருப்பது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கலாநிதி டி சில்வா தெரிவித்தார்.
இருப்பினும், இதுவரை மன்னார் படுக்கையின் மிகக் குறைந்த பகுதியே ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நவீன புவியியல் அகழ்வாராய்ச்சி நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட வேண்டிய மிகப்பெரிய பரப்பு இன்னும் எஞ்சியுள்ளது என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சி சுற்றில் பங்கேற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு, பெட்ரோலிய மேம்பாட்டு அதிகாரசபையிடம் தற்போதுள்ள மன்னார் படுக்கை தொடர்பான புவியியல் தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
வரலாற்று ரீதியாக தனது எரிசக்தி தேவைகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியத்தையே பெருமளவில் நம்பியிருக்கும் இலங்கைக்கு, இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ள வளங்களின் அளவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும்.
இருப்பினும், இந்த வளங்களின் உண்மையான அளவும் அவற்றின் வணிக ரீதியான பயன்பாடும் (commercial viability) இனிவரும் மேலதிக அகழ்வாராய்ச்சிகள், மதிப்பீடுகள் மற்றும் வெற்றிகரமான அகழ்ந்தெடுப்பு நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளன.
![]()