இலங்கை

பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு நாங்கள் உரிய தீர்வு காண்போம்; யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன

சட்டம் அனைவருக்குமே சமன். சட்டத்துக்கு மேலாக ஒருவரும் இல்லை. காணாமலாக்கப்பட்ட பிரச்சனைகள் போன்ற சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கும் சட்டம் சரியான முறையிலே நடைமுறைப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆகஸ்ட் 30 ஆம் திகதி என்பது உலகெங்கிலும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நாளாகும். அதேபோன்று அவர்களின் குடும்பங்களின் அந்த வேதனையை நாங்கள் ஏற்றுக்கொள்ளுகின்றோம். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நாங்கள் இந்த நிகழ்வில் பங்கெடுப்பதற்கு முன்னர், காணாமற்போனவர்களின் அன்பிற்குரியவர்களைச் சந்திப்பதற்காக அவர்களின் மூன்று வீடுகளுக்குச் சென்றிருந்தோம். அந்த சந்தர்ப்பங்களில் நான் அவர்களுடன் பேசினேன். அங்கு எனக்குப் புரிந்த முக்கிய விடயம் என்னவென்றால், பலவந்தமாக காணாமலாக்கப்படுவது என்பது ஒரு தனிநபரைப் பற்றிய தகவல் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல; அது முழு குடும்பத்தையுமே நீண்டகால நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளுகிறது. ஒரு தாய் தன் பிள்ளையைப் பற்றிய பதிலுக்காகக் காத்திருக்கிறார். ஒரு மனைவி தன் கணவனைப் பற்றிய பதிலுக்காகக் காத்திருக்கிறார். ஒரு பிள்ளை தன் தந்தை அல்லது தாயைப் பற்றிய பதிலுக்காகக் காத்திருக்கிறார். வருடங்கள் கடந்தாலும் அவர்களின் மனங்களில் உள்ள கேள்வி மாறுவதில்லை. அந்த கேள்விதான் உண்மையிலேயே ‘அவர்களுக்கு என்ன நடந்தது?’ என்பதாகும்.

எனவே, இந்நாளை வெறும் நினைவுகூரலுடன் மட்டும் முடித்துவிட முடியாது. நினைவுகூரலை ஒரு பொறுப்பாக மாற்ற வேண்டும். தனது அன்பிற்குரியவருக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு குடும்பத்திற்கு உள்ள உரிமை அரசியல் உரிமை அல்ல; அது அடிப்படை மனித உரிமை, அது நீதிக்கான கேள்வி.

அதேபோன்று, இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மாத்திரம் உரித்தான பிரச்சனை அல்ல. இலங்கையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சமூகங்கள் மற்றும் அரசியல் பின்னணிகளில் மனிதர்கள் காணாமற்போயுள்ளனர். அதனால் இந்தப்பிரச்சனைக்குச் சரியான தீர்வை வழங்குவது ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தின் பொறுப்பாகும்.

இந்த விடயம் பற்றிக் பேசும்போது, தற்போதைய அரசாங்கத்தின் ஒரு முதன்மை கொள்கையைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். அதுதான் சட்டத்தின் ஆதிக்கம். சட்டத்திற்கு மேலாக எவரும் இல்லை. எவர் எவ்வளவு பலமிக்கவராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், அவர்களின் அரசியல் தொடர்புகள் எதுவாக இருந்தாலும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம்.

மக்கள் எங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தது பழிவாங்குவதற்காக அல்ல. எவரையும் தனிப்பட்ட முறையில் தண்டிப்பதற்காக அல்ல. மக்களின் சாதாரண எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கே, சட்டத்தை வலுப்படுத்துவதற்கே, சட்டத்தை அனைவருக்கும் சமமாகச் செயல்படுத்துவதற்கே, மக்களின் எதிர்பார்ப்புகளின் நீதியை நிலைநாட்டுவதற்கே ஆகும்.

காணாமற்போனவர்கள் பற்றிய விசாரணைகளின் போது, நாங்கள் பின்பற்றுவது ஊகங்களை அல்ல. நாங்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும், சாட்சியங்களைக் கண்டறிய வேண்டும், விசாரணை செய்ய வேண்டும். குற்றமிழைக்கப்பட்டிருப்பதாகச் சான்றுகள் இருந்தால் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதேபோன்று சாட்சியங்கள் இல்லாமல் எவர் மீதும் குற்றம் சாட்டுவதும் எமது முறையல்ல. சட்டத்தின் ஆதிக்கம் என்றால் அதுவேயாகும்.

எமது அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பிறகு, நாங்கள் இது பற்றிப் பேசிவிட்டு மாத்திரம் நிற்கவில்லை. நடவடிக்கைகள் எடுத்தோம். காணாமற்போன ஆட்களைப் பற்றிய அலுவலகத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதன் இயக்குநர் சபையின் தகுதியான நபர்களை நியமித்துப் பூர்த்தி செய்தோம். காணாமற்போனவர்களின் குடும்பங்கள் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரின் பங்களிப்பும் இயக்குநர் சபையில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இடைநிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறைபாடாக இருந்த அத்தியாவசிய ஊழியர்களின் எண்ணிக்கைக்கு 69 புதிய பணியாளர்களைப் புதிதாக இணைத்துக்கொண்டிருக்கிறோம். அதேபோன்று அவர்களுக்குச் சுயாதீனமாகச் செயல்பட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதியாகும் போது, ஓஎம்பிக்கு கிடைத்த மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் 16,966 விசாரிக்கப்படக்கூடியவை எனக் கண்டறியப்பட்டு, முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்னும் சுமார் 11,000 எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் தொடர்பான நிதி ஒதுக்கீடு இல்லாததால் விசாரணை நடவடிக்கைகள் தாமதமாகியிருந்தன.

அதிகாரத்திற்கு வந்த எமது அரசாங்கம் 2025 ஆம் ஆண்டில் அமைச்சரவை பத்திரிம் ஒன்றின் மூலம் 375 மில்லியன் ரூபாயை இதற்காக ஒதுக்கியது. இதன் கீழ் 75 பேர் அடங்கிய விசாரணைக்குழுக்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதற்கமைய, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடையும் போது, எஞ்சியிருந்த முறைப்பாடுகளில் 3,000 க்கும் அதிகமான முதற்கட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ளன.

மிகுதி விசாரணைகள் சம்பந்தமாகவும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியிருக்கிறோம். 2027 ஆம் ஆண்டு முடிவடையும் போது கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளின் முதற்கட்ட விசாரணைகளையும் முடிப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

இதுவரை செய்யப்பட்டுள்ள முதற்கட்ட விசாரணைகளில் இருந்து 1,594 சம்பவங்கள் மேலதிக விசாரணைகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

குடும்பங்களின் சட்டப்பூர்வ மற்றும் நிர்வாகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, 2026 ஜூன் 30 ஆகும் போது, காணாமற்போனமைக்கான சான்றிதழ் 2,719 ம், மரண சான்றிதழ் 157ம் வழங்கப்பட்டுள்ளன.

காணாமற்போன 32 நபர்கள் தொடர்பான இறுதித் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகவல்கள் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்து, அந்தந்தக் குடும்பங்களுக்கு மாத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

5,467 நபர்களுக்காகப் புனர்வாழ்வுக் கொடுப்பனவு வழங்குவதற்காக இழப்பீட்டு அலுவலகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உள-சமூக நிவாரணம், வீட்டு வசதிகள், கல்வி வாய்ப்புகள், தொழிற்பயிற்சி, சுயதொழில் நிவாரணம் போன்ற திட்டங்கள் தொடர்பாகவும் செயற்பட்டு வருகிறோம். காணாமற்போன குடும்பங்களின் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு, நிபுணர் குழு ஒன்றின் மூலம் வழிகாட்டப்பட்டு, இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நிவாரணப் பொதியை திட்டமிட்டு வருகிறோம்.

இவை அனைத்தும் ஆரம்பப் பலன்கள் மட்டுமே. இவை எதிர்காலப் பயணத்தின் மைல்கற்கள் மட்டுமே. இன்னும் எம்மீது மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நாங்கள் கைவிடமாட்டோம்.

காணாமற்போனவர்கள் பற்றிப் பேசும்போது, மனிதப் புதைகுழிகள் பற்றிய விசாரணைகளும் அடங்கும். இவ அரசியல் இலாபம் அடைவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் அல்ல. இவை மனித உயிர்கள் சார்ந்த விடயங்கள். அதனால் எங்களுக்குத் தேவையான ஒன்றுதான் உண்மையைக் கண்டறிவது.

விசாரணைகள் சாட்சியங்களின் அடிப்படையில், அறிவியல் முறைகளுக்கு அமைவாக, சட்ட மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டலுக்கு அமைவாக நடைபெற வேண்டும். தேவையான இடங்களில் மரபணு பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். சாட்சியங்கள் சரியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நிபுணத்துவ அறிவையும் வளங்களையும் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதை உணர்ந்து தேவையான அனைத்தையும் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வாராய்ச்சி மற்றும் அது தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகளுக்காக இதுவரை 57 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய கட்டங்களுக்கும் தேவையான பணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதாவது நிதித் தட்டுப்பாட்டின் காரணமாக உண்மையைக் கண்டறியும் அந்தச் செயற்பாடு எப்போதும் இடைநிறுத்தப்படக்கூடாது.

சாட்சியங்களைப் பாதுகாப்பது, உண்மையை உறுதிப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். உங்கள் அனைவருக்கும் ஒரு விசேடமான விடயத்தைக் கூற விரும்புகிறேன். நீங்கள் வருடக் கணக்கில் காத்திருந்தீர்கள், கேள்விகள் கேட்டீர்கள், பதில்களைத் தேடினீர்கள், வேதனையோடு வாழ்ந்தீர்கள். அரசாங்கத்தால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. சிலவேளைகளில் அப்பாவி ஒருவரை மீண்டும் கொண்டுவர முடியாத நிலையும் இருக்கலாம். ஆனால் எங்களால் ஒன்றைச் செய்ய முடியும். உண்மையைத் தேட முடியும், விசாரணை செய்ய முடியும், சட்டத்தைச் செயல்படுத்த முடியும், நீதியை நிலைநாட்ட முடியும். அதற்காக நாங்கள் அர்ப்பணிக்கிறோம்.

இந்தப் பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. ஆனால் அதற்காக நாங்கள் நின்றுவிட முடியாது. இன்று நாங்கள் காணாமற்போனவர்களை நினைவுகூருகிறோம். ஆனால் எமது பொறுப்பு இத்துடன் முடிவடைவதில்லை. நினைவாற்றல் பொறுப்பாக மாற வேண்டும். பொறுப்பு நடவடிக்கையாக மாற வேண்டும்.

எமக்குத் தேவை கடந்த காலத்தின் வேதனையை இன்னுமொரு தலைமுறைக்கு உரிமையாக்கும் நாடு அல்ல. எமக்குத் தேவை சட்டம் அனைவருக்கும் சமமான ஒரு நாடு. உண்மையைத் தேடப் பயப்படாத ஒரு நாடு. பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் ஒரு நாடு மற்றும் ஒவ்வொரு குடிமகனினதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் ஒரு நாடு. அதை நாம் உருவாக்குவோம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button