கடந்த காலக் குற்றங்களின் சாட்சியங்கள் கொன்றழிப்பு?; அதற்காகவே இப்போது துப்பாக்கிச் சூடுகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக் காலமாக இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களானது, கடந்த காலக் குற்றச்செயல்களின் சாட்சியங்களை அழிக்கும் நோக்கிலேயே நடத்தப்படுவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆபத்தான குற்றவாளிகள் 58 பேரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் வெளிநாடுகளில் கைது செய்து நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளோம். இக்குற்றவாளிகள் வெளிநாடுகளில் மாளிகைகளில் வசித்துக்கொண்டு, ஹெலிகொப்டர்கள் மற்றும் சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தி மிக உயர்தரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். கடந்தகால ஆட்சியாளர்களின் அரசியல் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைத்திருந்தன.
எவ்வாறாயினும் எமது பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள விசாரணை பிரிவினர் பல்வேறு நபர்களை நாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். சர்வதேச பொலிஸார் மற்றும் ஏனைய நாடுகளுடன் நம்பிக்கையை கட்டியெழுப்பி, நீண்டகால விசாரணைகள் மூலமாகவே இச்செற்பாடுகளை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. இதன் காரணமாக எதிர்க்கட்சியினர் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை அண்மைக் கால துப்பாக்கிச் சூடுகள் மூலம், குற்றவாளிகள் தங்களுக்கு எதிரான சாட்சியங்களை அழிக்க முயல்கின்ற போதிலும், திறமையான விசாரணைப் பிரிவினர் மூலம் அந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
![]()