இலங்கை

தேர்தல்களை நடத்தாது ஆட்சியைத் தொடரச் சதி!; இடமளிக்கமாட்டோம் என்கிறார் நாமல்

தேர்தல்களை ஒத்திவைத்து தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்குமாக இருந்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு கூட்டமொன்றிலேயே நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

1931ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடக்கின்றன. சில அரசாங்கங்கள் தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சித்தன. அவ்வாறான அரசாங்கங்களுக்கு மக்கள் உரிய பதிலை வழங்கிய வரலாறுகள் உள்ளன. சில கட்சிகள் தொடர்ச்சியாக 17 வருடங்களாக அரசாங்கத்திற்கு வர முடியாமல் இருந்தன. இன்று ஜே.வி.பி அரசாங்கமும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கியும், மகாநாயக்க தேரர்களை ஒடுக்கியும், மதத் தலைவர்களை விமர்சித்தும், பிக்குகளை அவமதித்தும் மற்றும் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தேர்தலை ஒத்திவைத்து தமது அரசியல் நிழச்சி நிரலை 20 வருடங்களுக்கு செயற்படுத்த முயற்சிக்குமாக இருந்தால் அது அரசாங்கம் தவறிழைக்கும் இடமாகும்.

இந்த நாட்டில் ஒவ்வொரு அரசாங்கமும் மக்களின் வாக்குகளிலேயே தெரிவு செய்யப்படுகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பங்களாதேசம், நேபாளத்தில் எற்பட்டதை போன்று ஜனநாயகத்திற்கு அப்பாலான அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கப்பட்டது. அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. நாங்கள் பாராளுமன்ற முறைமையில் அரச தலைவரை நியமித்தோம். வரலாற்றில் அரசியலமைப்புக்கு முரணாக அரசாங்கம் அமைக்கப்பட்டதும் இல்லை இனி அமைக்கப்படவும் இடமளிக்க மாட்டோம். எவ்வாறாயினும் ஜனநாயகத்தை இல்லாமல் செய்து மக்களை அச்சுறுத்தியும் அரசியல்வாதிகளை அடக்கியும் பலவந்தமாக அரசாங்கத்தை பிடித்துக்கொண்டு செல்ல இந்த அரசாங்கம் முயற்சிக்குமாக இருந்தால் அதற்கும் இடமளிக்க மாட்டோம்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகின்றது. அந்த நிலக்கரியால் மின்கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதற்கு பொறுப்பு கூறுவது யார்? தரமற்ற நிலக்கரி கொண்டுவந்த அரசியல்வாதிகளையும் வர்த்தகர்களையும் இந்த அரசாங்கம் பாதுகாக்கின்றது. துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவித்த அரசியல்வாதிகளையும் இந்த அரசாங்கம் பாதுகாக்கின்றது. ஜனாதிபதி செயலாளராக இருப்பவர் துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவித்தவர். அவரை பாதுகாக்கின்றனர். ஜனாதிபதி இந்த விடயத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இரண்டு வருடங்களாக நாங்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் ஜனாதிபதி மூடி மறைக்க முயற்சிக்கின்றார். நேர்மையான முறையில் திருடர்களை பிடிக்க வேண்டுமாயின் தனது அலுவலகத்தில் இருந்து அந்த நடவடிக்கையை ஜனாதிபதி ஆரம்பிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பதவியில் இராஜினாமா செய்யச் செய்து அவரை நிதி அமைச்சின் செயலாளராக நியமித்தனர். அந்த நாளில் இருந்து ஹெக்கர் பாய்கின்றனர். இதன் நஸ்டங்களை மக்கள் மீது சுமத்துகின்றனர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button