யாழ். திருவிழா சம்பவம்; புறஊதா கதிர் வீச்சால் கண்களுக்கு பாதிப்பா?

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 58 ஆண்கள், 44 பெண்கள் மற்றும் 55 குழந்தைகள் உட்பட 250 க்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்ட கண் அசௌகரியங்கள், புறஊதா (யு.வி.) கதிர்களால் ஏற்பட்ட கண் பாதிப்புகளாக இருக்கலாம் என மூத்த கண் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவில் சுற்றாடலில் பொருத்தப்பட்டிருந்த சக்திவாய்ந்த மின்விளக்குகளின் பின்னர், மக்களுக்குக் கடுமையான கண் வலி, எரிச்சல், கண்ணீர் வடிதல், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இந்த அறிகுறிகள், அதிகப்படியான யு.வி. கதிர்வீச்சினால் கண்ணின் மேற்பரப்பில் ஏற்படும் ‘போட்டோ கெராடிடிஸ்’ (Photo keratitis) பாதிப்புடன் ஒத்துப்போவதாகக் கூறிய மருத்துவர், பரிசோதனைகளின் பின்னரே இதை உறுதிப்படுத்த முடியும் என்றார்.
கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சீனத் தயாரிப்பு மின்விளக்குகளைக் கைப்பற்றிய பொலிஸார், அவற்றைத் தொழில்நுட்பப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இவை HID (High-Intensity Discharge) வகை விளக்குகளைப் போல் காணப்படுகின்றன. இத்தகைய விளக்குகள் பாதுகாப்பு கண்ணாடிகள் அல்லது பில்டர்கள் (Filters) இல்லாமல் பயன்படுத்தப்பட்டால் ஆபத்தான யு.வி. கதிர்வீச்சை வெளியிடும்.
போட்டோ கெராடிடிஸ் என்பது ‘கண்ணில் ஏற்படும் சூரியத் தீக்காயம்’ போன்றது. இதன் அறிகுறிகள் வெளிப்பாடு நடந்து சில மணிநேரங்களுக்குப் பிறகே தெரியவரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கண் பாதிப்புக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு.தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் பின்னர், அனைவரும் தற்போது வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்தார்.
வீடு திரும்பியவர்கள் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு ஏற்ப தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
![]()