உலகம்

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்! பொன்சேகா எச்சரிக்கை

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின் போலியான வேடங்களுக்கு மக்கள் மீண்டும் ஏமாந்துவிடக் கூடாது என்றும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி சிறந்ததே. அந்த நெருக்கடியினால்தான் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்கள், ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. போராட்டத்தின் பின்னர்தான் மக்கள் அரசியல் ரீதியில் சிந்தித்துச் சிறந்த அரசைத் தெரிவு செய்தனர்.

கடந்த காலங்களில் ஊழல்மிக்க அரசியல் கட்டமைப்பு காணப்பட்டது. அரசியல்வாதிகள் பெருந்தொகையான அரச நிதியைக் கொள்ளையடித்துவிட்டு அதில் மிகவும் குறைந்த நிதியையே மக்களுக்கு வழங்கினார்கள். தேசப்பற்றாளர்களைப் போன்று பேசினார்கள்.

புதிய அரசியல் கலாசாரம் தோற்றம் பெற்றாலும் மக்கள் இன்றும் அந்த ஊழல்மிக்க பழைய அரசியல் கலாசாரத்தை நாடும் தன்மை காணப்படுகின்றது. அரசியல் அலைக்கு அமைய வாக்களிக்கும் கலாசாரத்தில் இருந்து மக்கள் முதலில் மாற வேண்டும்.

மக்கள் அரசியல் அலைக்குப் பின்னால் செல்லும் போது ஊழல்வாதிகளும் படுகொலையாளிகளும்தான் நாடாளுமன்றத்துக்குச் செல்வார்கள். கடந்த காலங்களில் அவ்வாறான நிலையே காணப்பட்டது.

2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் தெரிவு செய்த சிறந்த அரசியல் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும். நாட்டில் தற்போது எதிர்க்கட்சித் தலைமைக்கு வெற்றிடம் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் சிதறிக்கிடந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிறைச்சாலை செல்வதைத் தடுப்பதற்காகவே தற்போது ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் நாட்டுக்காக ஒன்றும் ஒன்றிணையவில்லை என்பதை மக்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கடந்த கால ஆட்சியாளர்கள் கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால், அந்த அபிவிருத்திகளால் மக்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. கடன் பெற்றுத் தமது குடும்பத்தை வளப்படுத்தினார்கள், வெளிநாடுகளில் சொத்து சேர்த்தார்கள்.

அதனால், நாடு வங்குரோத்து நிலையடைந்தது. இதன் தாக்கம் நடுத்தர மக்கள் மீது முழுமையாகச் சுமத்தப்பட்டது. அதன் தாக்கமே இன்றளவும் தொடர்கின்றது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெறப்பட்டது. தற்போதைய அரசும் விரும்பியோ விரும்பாவிட்டோ நாணய நிதியத்தின் செயற்றிட்டங்களை அமுல்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. அநுர அரசு சிறந்த முறையில்தான் செயற்படுகின்றது.

ஊழல், மோசடிகள் இல்லாமல் சட்டத்தின் பிரகாரம் அரச அதிகாரிகள் செயற்படுகின்றார்கள். இதனால் ஊழல்வாதிகள் அனைவரும் இன்று அரசுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். அரசுடன் நான் இணையப் போவதில்லை; அரசியலில் ஒரு மாற்று சக்தியாகச் செயற்படுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button