இலங்கை

அல்லைப்பிட்டிப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜிம்பிறவுண் அடிகளார் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தன

யாழ்.அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமலாக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமையுடன் 20 வருடங்களானது. இதனையொட்டி நேற்று அல்லைப்பிட்டியில் 20 ஆம் ஆண்டு நிறைவு நினைவேந்தல் பேரணியும் திருப்பலியும் இடம்பெற்றது.

அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து பவனி ஆரம்பித்துப் புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தை அடைந்து அதனைத் தொடர்ந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டில் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலையை வெளியுலகிற்கு எடுத்துரைத்த அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தை அன்ரன் அமலராஜ் அடிகளாருக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக ஜிம்பிறவுண் அடிகளார் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணிமாற்றம் செய்யப்பட்டார்.

ஜிம்புறவுண் அடிகளார் அல்லைப்பிட்டிப் படுகொலைக்கு எதிராக உரத்துக் குரல் கொடுத்தார். 2006 ஆம் ஆண்டில் அல்லைப்பிட்டிப் பகுதி இலங்கை இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த நிலையில் 20.08.2006 இல் ஜிம்புறவுண் அடிகளார் தனது உதவியாளர் விமலதாஸுடன் தன் பணித் தளமாகிய அல்லைப்பிட்டிக்குச் சென்றார். எனினும், அங்கிருந்து அவர்கள் இருவரும் மீண்டும் திரும்பவே இல்லை. இவர்கள் தொடர்பாக யாழ். ஆயர் இல்லம் கேள்விகள் எழுப்பிய போதும் அங்கு நிலைகொண்டிருந்த இராணுவம் பதிலேதும் வழங்கவில்லை. இன்றுவரை விசாரணைகளும் இல்லை. உரிய நீதியுமில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button