இங்கிலாந்து வங்கியில் முடங்கிய 31 டன் தங்கம் – விடுவிக்க கோரும் நாடு!

இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 31 மெட்ரிக் டன் வெனிசுலாவின் தங்கத்தை, மீண்டும் வழங்குமாறு வெனிசுலா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சுமார் 4 பில்லியன் டொலர் மதிப்புடைய இந்தத் தங்கத்தை, அண்மைய இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க பயன்படுத்த விரும்புவதாக இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் 575.9 சதவீதம்
முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் தேர்தல் சட்டபூர்வமானது அல்ல என்ற பிரித்தானியாவின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, இந்தத் தங்கத்தை விடுவிப்பது தொடர்பாக பல ஆண்டுகளாக சட்டப் பிரச்சினை நீடித்து வருகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகளைப் புனரமைத்தல், சுகாதாரம், மின்சாரம் மற்றும் இடிபாடுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கு தங்கத்தின் மதிப்பைப் பயன்படுத்த வெனிசுலா முயற்சித்து வருகிறது.

நீண்டகால பொருளாதார நெருக்கடி, நிர்வாகச் சீர்கேடு, ஊழல் மற்றும் அமெரிக்கத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவில், ஜூலை மாத பணவீக்கம் 19.9 சதவீதமாகவும், ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 575.9 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
ஜூன் 24ஆம் தேதி ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 16,740 பேர் காயமடைந்ததாகவும், 17,907 பேர் வீடுகளை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 68 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 லட்சம் பேருக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தத் தங்கம் எங்கள் மக்களுக்குச் சொந்தமானது; பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அது பயன்படுத்தப்பட வேண்டும்” என ஜனாதிபதி ரோட்ரிக்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
![]()