நாய்களின் சத்தத்தை பகுப்பாய்வு செய்து உரிமையாளருக்கு தகவல் அனுப்பும் புதிய கருவி

சீனாவில் நாய்களின் சத்தங்களை பகுப்பாய்வு செய்து, அவற்றின் தேவைகளை உரிமையாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவின் விகு நகரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, நாய்களின் கழுத்தில் அணிவிக்கப்படும் பட்டை மூலம் அவை எழுப்பும் சத்தங்களைப் பதிவு செய்கின்றது.
பின்னர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்தச் சத்தங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, நாய்க்கு பசிக்கிறதா, உரிமையாளரைத் தேடுகிறதா அல்லது வெளியே செல்ல விரும்புகிறதா போன்ற தகவல்கள் கண்டறியப்படுகின்றன.
இதன் பின்னர் பெறப்படும் தகவல்கள், நாயின் உரிமையாளரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக 5 இலட்சத்துக்கும் அதிகமான நாய்களின் நடத்தைகள் மற்றும் சத்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில், அவை முழுமையாக நிறைவடைந்த பின்னர் இந்தக் கருவி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், இனி செல்லப்பிராணிகள் தங்களது தேவைகளை நேரடியாகக் குறுஞ்செய்தி மூலம் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கும் காலம் உருவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
![]()