இலங்கை

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்; பின்வாங்குகிறாரா ஜனாதிபதி அநுர?

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் தமது சங்கத்தினர் நடத்திய கலந்துரையாடலை தொடர்ந்து 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை ஜனாதிபதியை சந்தித்து நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரஜீவ் அமரசூரிய இதனை கூறியுள்ளார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய கூறுகையில்,

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலப்பாடு குறித்து முதன்முறையாக ஜனாதிபதியை சந்தித்து நாங்கள் கலந்துரையாடினோம். இந்த சந்திப்பின் போது இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் ஏன் எதிராக இருக்கிறார்கள் என்பது குறித்து அவருக்கு நாங்கள் தெளிவுபடுத்தினோம். அவரும் தனது நிலப்பாட்டையும் கருத்துக்களையும் எங்களிடம் சுதந்திரமாகப் பகிர்ந்துகொண்டார்.

இதன்போது நாங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தோம். அதாவது இதுபோன்ற மாற்றங்களைச் செய்யும்போது, விரிவான மற்றும் நிபுணர்கள் அடங்கிய கலந்துரையாடலுக்குப் பிறகே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

இன்று நாங்கள் ஒரே மேசையில் அமர்ந்தே பேசினோம். இரு பக்கங்களிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இன்றைய கலந்துரையாடலை மேலும் முன்னோக்கி கொண்டு சென்று, பரந்த துறைசார் நிபுணர்களின் விவாதமாக மாற்ற முடியும் என நம்புகிறோம். சட்டத்தரணிகள் சங்கம் மட்டுமல்லாது, பல்கலைக்கழக பேராசிரியர்கள், இது குறித்து ஆராய்ச்சி செய்தவர்கள், அறிக்கைகள் சமர்ப்பித்தவர்கள் என அனைவரின் கருத்துக்களையும் பெற்று, மீண்டும் பரிசீலித்து ஒரு சரியான முடிவுக்கு வர முடியும் என எதிர்பார்க்கிறோம்.

இன்று ஒரு நல்ல கலந்துரையாடல் நடைபெற்றது. அரசியலமைப்புத் திருத்தம் என்பது அரசாங்கத்தின் ஒரு அதிகார வரம்பிற்குட்பட்டது. அரசாங்கத்திற்கு அதற்கான அதிகாரம் உள்ளது. ஆனால் அதற்கு எதிராக எங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பது எங்கள் உரிமை. இன்றைய சந்திப்புக்கு பிறகு இது ஒரு நல்ல திசையை நோக்கிச் செல்லும் என நம்புகிறோம்.

தற்போதைய ஜனாதிபதி ஒரு முதிர்ச்சியடைந்த தலைவர், முதிர்ச்சியடைந்த அரசியல்வாதி. சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்காக பல ஆண்டுகளாகப் போராடியவர். எனவே, இது எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button