இலங்கை

செம்மணிப் புதைகுழியில் நேற்று பெரும் அதிர்ச்சி; 5 குழந்தைகளது உட்பட 15 எலும்புக் கூடுகள்!; பதறவைக்கும் புதிய ஆதாரங்கள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நேற்றைய 49ஆம் நாள் முடிவில், ஐந்து குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட 15 மனித எலும்புக்கூட்டுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 11 எலும்புக்கூட்டுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள குழந்தைகளின் 5 எலும்புக்கூடுகளுடன் இதுவரை செம்மணிப் புதைகுழிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

செம்மணிப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழு, தடயவியல் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான மருத்துவக் குழு, தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றினர்.

நேற்றைய தினம் அகழ்வுகளின் போது ஐந்து குழந்தைகளின் எலும்புக் கூடுகள் அடங்கலாக பதினைந்து எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் பதினொரு எலும்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடங்கியது முதல் இதுவரை மொத்தமாக 539 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 524 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

அகழ்வாராய்ச்சியின் போது 516வது இலக்கமிடப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதியின் இடுப்புப் பகுதியில் இருந்து தாயத்து போன்ற ஒரு பொருளும், அகழ்ந்தெடுக்கப்பட்ட மணல் குவியலைச் சோதனையிட்ட போது ஒரு ரூபா நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாகக் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வழக்கமான அகழ்வுப் பகுதிகளைத் தவிர்த்து, சோதனை அடிப்படையில் தோண்டப்பட்ட இரண்டு புதிய குழிகளில் இருந்தும் தலா ஒரு எலும்புக்கூட்டுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுப் பணிகள் மூலம் கண்டெடுக்கப்படும் சான்றுப் பொருட்கள் மற்றும் மனித எச்சங்கள் அனைத்தும் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் அறிவியல் பூர்வமான பரிசோதனைகளுக்காகவும், தடயவியல் பகுப்பாய்விற்காகவும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button