உலகம்

அமெரிக்காவில் 43,000 டொலர் மதிப்பிலான தங்கம், வெள்ளி திருட்டு

கனடியப் பெண் எல்லையில் கைது அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 43,000 கனேடிய டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர், மீண்டும் கனடாவுக்குத் திரும்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் ஒன்ராறியோ, பீம்ஸ்வில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கைலீ ஹோகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

கடந்த மே 11 அன்று ஃபிலடெல்ஃபியாவிலிருந்து சுமார் 40 நிமிட பயணத் தொலைவில் உள்ள பென்சலேம் டவுன்ஷிப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் தங்கம் மற்றும் வெள்ளி அடங்கிய பார்சல் ஒன்றின் வருகைக்காகக் காத்திருந்தவேளையில், அஞ்சல் ஊழியரிடம் சந்தேகநபர் தாங்களே இதன் உண்மையான உரிமையாளர் எனக் கூறி பார்சலுக்குக் கையொப்பமிட்டுப் பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனைப் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பார்த்துள்ளார். திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் மொத்த மதிப்பு 43,549 கனேடிய டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், வாகனப் பதிவு எண் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சந்திப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேகநபர் பயன்படுத்திய ‘நிசான்’ ரக காரைக் கண்டறிந்தனர்.

விசாரணையில், மே 10 அன்று ஃபிலடெல்ஃபியா விமான நிலையத்தில் உள்ள கார் வாடகை நிறுவனத்திடமிருந்து இந்த காரை ஹோகன் வாடகைக்கு எடுத்ததும், மே 11 அன்று திருட்டை அரங்கேற்றிய கையோடு காரைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு ஏரிஸோனாவுக்கு விமானத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஹோகனுக்கு எதிராகக் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜூலை 5 ம் திகதி, நியூயோர்க்கின் லூயிஸ்டன் பகுதியில் உள்ள எல்லைக் கடப்பு வழியே மீண்டும் கனடாவுக்குள் நுழைய முயன்றபோது, அமெரிக்க விசா அனுமதியில் அங்கு தங்கியிருந்த ஹோகனை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.இவர் மீது ஆவணப் போலி தயாரித்தல், சட்டவிரோதமாகப் பொருட்களைக் கவர்தல் மற்றும் ஏமாற்றித் திருடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இக்குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட ஹோகன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்குப் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது பக்ஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button