இலங்கை

பொதுஜன பெரமுனவின் சாகர காரியவசம் கைது;  பிணையில் விடுவிப்பு

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக தான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று திங்கட்கிழமை காலையில் கொழும்பிலுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

அண்மையில் பொதுஜன பெரமுனவினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய சாகார காரியவசம், நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபரிடம் அரசுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுமாறு கோருவதாகவும், ஆனால் அவர் வீதியில் பொதுமக்களிடம் அடிவாங்கும் பொலிஸ்மா அதிபராக வரலாற்றில் இணைவதை காண விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்து பொலிஸ்மா அதிபரை நடு வீதியில் கொலை செய்வதை போன்று அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும், இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவினால் கடந்த வியாழக்கிழமை கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு விளக்கமளித்து, அது தொடர்பான விசாரணைக்கு அனுமதி கோரியிருந்ததுடன், இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதன்படி நேற்று திங்கட்கிழமை முற்பகல் விசாரணைக்காக சாகர காரியவசம் அழைக்கப்பட்டிருந்ததுடன், விசாரணையை தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள்,நேற்று மாலை கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button