இலங்கை

வெலிகமவில் இந்திய எம்.பி. குழுவினர் மீது தாக்குதலா?; ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்

தெற்கில் வெலிகம பகுதியில், சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் மற்றும் அவர்கள் பயணித்த வேன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், நாடு தழுவிய சுற்றுப்பயணத்திற்காக 3ஆம் திகதி இலங்கைக்கு வந்ததாகவும் சிங்கள இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த இணையத் தள செய்தியில்,

அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வேனில் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு, 6ஆம் திகதி வெலிகம பகுதியில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தனர்.

இந்தத் தாக்குதல் 7ஆம் திகதி மதியம் நடைபெற்றுள்ளது.

அந்தக் குழுவினர் வெலிகம பகுதியில் உள்ள மற்றொரு விடுதிக்குச் சென்றுவிட்டு, தாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது, காலி-மாத்தறை பிரதான சாலையில் உள்ள வெலிகம பெலேனா சுற்று வீதிக்கு அருகில் ஒரு லொறி வீதியை மறித்தது.

அப்போது, வேன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வேனின் மீது தாக்கியுள்ளார்.

வேனில் இருந்த மேற்படி இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் அவரது குழுவினரும் வாகனத்திலிருந்து இறங்கி அது குறித்து விசாரிக்க முயன்றபோது, சந்தேக நபர் தனது தலைக்கவசம் மற்றும் இரும்புக் கம்பியால் அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து இந்தியக் குழுவினர் வெலிகம தலைமையக பொலிஸாரிடம் புகார் அளித்ததை அடுத்து, விசாரணையைத் தொடங்கிய பொலிஸா, சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியது.

பொலிஸாரின் விசாரணையின் போது (08), சந்தேக நபர் ஒரு வழக்கறிஞர் மூலம் பொலிஸாரிடம் சரணடைந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மிரிஸ்ஸவைச் சேர்ந்த 33 வயது மீனவர் என வெலிகம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன் இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button