இலங்கை

வடக்கைத் தாண்டி தெற்கிலும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – இனியாவது அரசு கவனம் செலுத்துமா?

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தற்போது வட பதியை தாண்டி தென் பகுதிக்குள் ஊடுருவி உள்ளது. எனவே அரசாங்கம் இனியாவது கவனத்தில் எடுத்து குறித்த இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில்  சனிக்கிழமை (8) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுகின்ற விடயங்கள் இன்று வடபகுதியில் பூதாகரமான ஒரு விடயமாக எமது மீனவர்களால் பார்க்கப்பட கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த காலங்களில் இவ்வாறு இந்திய மீனவர்கள் வருகை தொடர்ந்து இருந்த போதும், அவ்வப்போது நாங்கள் அதை கண்டித்து போராட்டங்கள் வாயிலாகவும் தெளிவுபடுத்தும் போது ஒரு சில விஷயங்களில் நாங்கள் அவர்களின் வருகையை கட்டுப்படுத்த கூடியதாக இருந்தது.

ஆனால், இந்த தடைக்காலம் முடிந்து ஆறாம் மாதம் தொடக்கம் அவர்களின் வருகை மிக மிஞ்சியதாக, இலங்கை கடல் எல்லையாக இருக்கின்ற Sea of Sri Lanka கடல் பகுதிக்குள் அவர்களின் அத்துமீறலும் அவர்களின் அடாவடித்தனமான உள்வருகையும் காணப்படுகின்றது.

இது தொடர்பாக அண்மையிலே தீவக மீனவர்கள் ஒரு பெரிய அளவிலான கடல் வழிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்கள்.

இருந்த போதிலும் இந்த போராட்டம் எந்த அளவுக்கு அவர்களால் செவிமடுக்க பட்டிருக்கின்றது. எந்த அளவுக்கு தமிழகத்திலும் சரி, மத்தியில் இருக்கின்ற அரசுக்கும் சரி அல்லது இலங்கை அரசிற்கும் எவ்வாறான ஒரு விடயத்தை அந்த செய்தி சொல்லியிருக்கிறது என்று நாங்கள் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அவர்களின் வருகை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கிறது.

அவர்களினால் கடல் வளம் அழிக்கப்படுவதும், மீனவர்களின் வாழ்வாதாரம் சேதமாக்கப்படுவதும், அதேபோன்று மீன்பிடி வலைகள், உபகரணங்கள் அழிவிற்கு உட்படுத்தப்பட்டு பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.இந்த குறுகிய காலப்பகுதிக்குள்.

மீனவர்கள் அழுதுகொண்டே தங்களுடைய நிலையை தெளிவுபடுத்திய போதிலும், எந்தவிதமான இரக்கமற்ற தனத்திலே இந்த இந்தியத் தமிழக மீனவர்கள் காணப்படுகின்றார்கள்.

மீனவர்கள் வயிற்றில் அடித்துக் கொண்டு கதறி அழுதும் இந்தச் சம்பவங்களை அவர்கள் ஒரு வேடிக்கையாக, வினோதமாகப் பார்க்கிறார்களா என்று கூட நாங்கள் எண்ணுகிறோம்.அதே போன்றுதான் இலங்கை அரசும் இதைக் கண்டு கொள்ளாது இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாத நிலையில் தான் இருக்கிறது.

இந்த அரசு உருவாகி இரண்டு வருடங்களை அண்மித்த காலப்பகுதியில் கூட, “இன்றும் நாங்கள் இராஜதந்திர ரீதியில் இந்த விஷயத்தைக் கையாள இருக்கிறோம்.இதில் பேசி நாங்கள் தீர்வெடுக்க இருக்கின்றோம்” என்று கடற்றொழில் அமைச்சர் கூறுகின்ற போதிலும், எந்தவிதமான ஒரு முன்னாயத்த நடவடிக்கையும் எடுக்கபட்டதாக இல்லை.

பேசுவதற்கு அதில் ஒன்றுமே இல்லை. பேச்சுவார்த்தை என்பது ஒரு தேவையற்ற விடயம். அவர்கள் எங்களது எல்லையைத் தாண்டாது இருப்பதை முதல் உறுதிப்படுத்துவதற்கு அரசு ஏதோ ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெறுமனே அவர்களை எதைக் கொண்டு பேசப் போகிறார்கள்? என்ன விடயத்தைப் பேசப் போகிறார்கள்?

சட்டவிரோத மீன்பிடி மூலமாக அந்த வலைகளைப் பயன்படுத்தி எமது கடலின் எல்லையிலே அவர்கள் தொழில் செய்வதை நாங்கள் பேசி எவ்வாறு தீர்வு காண்பது.

உடனடியாக அவர்களின் வருகையை கட்டுப்படுத்த இலங்கை அரசு தீர்க்கமான ஒரு நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும். அதற்கு உறுதுணையாக இந்த வடபகுதி மீனவர்கள் இருப்பார்கள்.அதேபோன்றுதான் இன்று வடபகுதியை தாண்டி தென்பகுதியில் புத்தளம், கற்பிட்டி, சிலாபம் வரைக்கும் அந்த மீனவர்களின் வருகை இப்போது ஊடுருவி இருக்கின்றது.

எனவே இனியாவது அரசு கவனம் செலுத்துமா? இந்தச் சிங்கள சமூகத்துக்காகவாவது இது குரல் கொடுக்குமா? இது வரை நாங்கள் பட்ட துன்பத்தை இப்போது அங்கு இருக்கின்ற மக்களும் படப் போகின்றார்கள்.

எனவே அரசு இன்னும் மெத்தனப் போக்காக இருக்குமாக இருந்தால், இலங்கை கடல் வளங்கள் அழிக்கப் படுவதையும் அதை நாங்கள் ஈடு செய்ய முடியாத அளவுக்கு கடலை நாங்கள் கை விடக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் இந்த வேளையிலே நான் பதிவு செய்கின்றேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button