சாட்சியம் வழங்குமாறு கோதாவுக்கு யாழ் நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியம் வழங்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்கால் பகுதியில் வைத்து முதல் நாள் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அதனை அடுத்து லலித் மற்றும் குகன் ஆகியயோரின் உறவினர்களால் ஆட்கொணர்வு மனு கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீடடு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.
அந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளின் போது கடந்த 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இணைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு மன்று உத்தரவிட்டது.
பாதுகாப்பு காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என தொடர்ச்சியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணைகளின் போது, கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்நிலை ஊடாக தோன்றி மன்றில் சாட்சியம் அளிக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்நிலை ஊடாக மன்றில் தோன்றி தனது சாட்சியங்களை பதிவு செய்ய மன்று அனுமதித்தது.
அதேவேளை எந்த நீதிமன்றில் முன்னிலையாக உள்ளதாகவும் , முன்னிலையாக ஏதுவான மூன்று திகதிகளையும் மன்றுக்கு தெரியப்படுத்துமாறும் , மன்று குறிப்பிடும் திகதியில் நீதிமன்றில் நேரில் முன்னிலையாகி நிகழ்நிலை ஊடாக சாட்சியம் அளிக்குமாறும் நீதிமன்று கட்டளையிட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு யாழ்ப்பபாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கோட்டபாய கொழும்பில் உள்ள நீதிவான் நீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் 29ம் திகதி நேரில் தோன்றி நீதவான் முன்னிலையில் நிகழ்நிலை ஊடாக சாட்சியம் அளிக்க மன்று கட்டளையிட்டது.
![]()