இலங்கை

மூதூர் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; ஐக்கிய நாடுகள் அலுவலகம் வலியுறுத்தல்!

மூதூர் படுகொலைகள் கடந்த காலத்தில் பதிவான ஒரு துயரச் சம்பவம் மாத்திரமல்ல. மாறாக அது நிகழ்காலத்துக்கான எச்சரிக்கையுமாகும். அப்படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருந்த வேளையில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று ‘அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்’ (பட்டினிக்கு எதிரான இயக்கம்) அமைப்பின் 17 தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் இடம்பெற்று 20 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னமும் அதற்குப் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்படவில்லை. இதுகுறித்து மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் தலைவர் டொம் ஃளெச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் மூதூரில் ‘அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்’ அமைப்பைச் சேர்ந்த 17 தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மோதல்கள் மற்றும் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியில் இருந்து சமூகம் மீட்சியடைய உதவுவதற்காகவே அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.

இருப்பினும் இன்று வரை பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கின்றன.

மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

மூதூர் படுகொலைகள் கடந்த காலத்தில் பதிவான ஒரு துயரச் சம்பவம் மாத்திரமல்ல. மாறாக அது நிகழ்காலத்துக்கான எச்சரிக்கையுமாகும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் 1000 க்கும் மேற்பட்ட மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் பணியில் உள்ளபோதே கொல்லப்பட்டனர். பெரும்பாலானோர் அவர்களது சொந்த சமூகங்களுக்கு அவசியமான சேவையில் ஈடுபட்டுவந்த தேசிய மட்டத்திலான பணியாளர்களாவர். அவ்வாறிருக்கையில் படுகொலை என்பது மனிதாபிமானப் பணிக்கு ஈடாகச் செலுத்தவேண்டிய தவிர்க்கமுடியாத விலையாக மாறக்கூடாது.

மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்படும்போது, சமூகங்கள் உதவிகளுக்கும் அப்பால் மேலும் பலவற்றை இழக்கின்றன. குறிப்பாக அவை நம்பிக்கையை இழக்கின்றன.

மூதூர் படுகொலை சம்பவம் அரங்கேறி இரு தசாப்தங்களின் பின்னரும் ஒரேயொரு செய்தி மாற்றமின்றி முன்நிறுத்தப்படுகிறது. மனிதநேயப் பணியாளர்கள் இலக்குகளாக மாறக்கூடாது. மாறாக அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே அதுவாகும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button