இலங்கை

தையிட்டி விகாராதிபதியினால் மூடப்பட்ட வீதியை திறப்பதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி; பொலிஸார் தாக்கல் செய்த வழக்க்கும் தள்ளுபடி

வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியினால் மூடப்பட்டுள்ள, பிரதேச சபைக்குச் சொந்தமான பவானி வீதியை வலிகாமம் வடக்கு பிரதேச சபை திறந்துவிடும் நடவடிக்கையைப் “பொது அமைதிக்குப் பங்கம் விளையும்” என்ற அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 81ஆம் பிரிவின் கீழ் தடுக்க முடியாது என மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த விடயத்தில் பிரதேச சபையின் சட்டரீதியான நடவடிக்கையை இந்தச் சட்டப் பிரிவின் கீழ் தடுப்பதற்கு இடமில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனுக்கும், சபையின் செயலாளருக்கும் எதிராகப் பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பிரதேச சபைக்குச் சொந்தமான பவானி வீதியை விகாரையின் விகாராதிபதி ஆக்கிரமித்து மூடி வைத்திருக்கின்றார் எனத் தெரிவித்து, அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து அந்த வீதியைத் திறப்பதற்குப் பிரதேச சபை உரிய ஏற்பாடுகளைச் செய்தபோதே, அதற்கு எதிராகச் சம்பந்தப்பட்ட விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரதேச சபையின் தவிசாளருக்கும் செயலாளருக்கும் எதிராகப் பலாலி பொலிஸார் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 81ஆவது பிரிவின் கீழ் “பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றனர்” எனத் தெரிவித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி பிரதேச சபை தவிசாளருக்கும் செயலாளருக்கும் சார்பாகச் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.

“மேற்படி 81ஆவது பிரிவின் கீழ் வழக்கானது இரண்டு தரப்புகளுக்கு இடையிலான சர்ச்சையை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்படலாம். ஆனால், விகாராதிபதியை ஒரு தரப்பாக அழைக்காமல் தவிர்த்த பொலிஸார், மற்றொரு தரப்பான பிரதேச சபை நிர்வாகத்தின் மீது வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இது அடிப்படையில் தவறானதாகும்; 81ஆம் பிரிவின் கீழ் இது சாத்தியமற்றது” என்று சுமந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், “பிரதேச சபையின் சட்டரீதியான நடவடிக்கைக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸார், அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றனர் என்ற பெயரில் தாம் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தரப்புக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றமை முற்றிலும் தவறான செயலாகும். சட்டரீதியான அரசுப் பணிகளுக்கு எதிராக இந்த 81ஆவது பிரிவைப் பயன்படுத்த முடியாது. அந்த நடவடிக்கை தவறாக இருப்பின், அதற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவையே சமர்ப்பிக்க முடியுமே தவிர, குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 81ஆவது பிரிவின் கீழ் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் குற்றத்தைச் சுமத்த முடியாது” என்றும் சுமந்திரன் நீதிமன்றத்தில் நீண்ட வாதத்தை முன்வைத்திருந்தார்.

அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், தீர்ப்பை வழங்கியது. சட்டத்தரணி சுமந்திரனின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மேற்படி பிரதேச சபையின் தவிசாளருக்கும் செயலாளருக்கும் எதிராக வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனக் குறிப்பிட்டு, வழக்கைத் தள்ளுபடி செய்தது.

நீதிமன்றத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உத்தியோகபூர்வ சட்டத்தரணி ச. கஜேந்திரனும் பிரசன்னமாகியிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button