இலங்கை

குட்டிமணி, தங்கத்துரையின் சிலை நிறுவுவதற்கான தடை உத்தரவு நீக்கம்;  பருத்தித்துறை நீதிமன்றம் அறிவிப்பு

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலைகளை நிறுவுவதற்கும், அங்கு கொல்லப்பட்ட 53 பேருக்குமான நினைவுத் தூபி நிறுவுவதற்கும் பருத்தித்துறை நீதிமன்றினால் ஏற்கனவே விடுக்கப்பட்ட தற்காலிக தடை உத்தரவு நேற்று புதன்கிழமையுடன்(05) நீக்கப்படுவதாக பருத்தித்துறை நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

கடந்த 25/07/2026 அன்று தியாகிகள் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது 43 வது நினைவு நாளில் அவரது சகோதரனால் அவரது சொந்த ஆதனத்தில் சிலை நிறுவுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்த நிலையில் கடந்த 22/07/2026 அன்று வல்வெட்டிதுறை நகரசபையின் முன்னாள் உப. தவிசாளர் கந்தசாமி சதீசை கைது செய்து குற்றவியல் 106 இன் கீழ் வழக்கு தாக்கல் செய்து

நீதிமன்றில் முற்படுத்தி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04)வரை குட்டிமணி தங்கதுரையின் சிலை நிறுவ தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் (04)வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அந் நிலையில் பொலிசாருடன் அரச சட்டத்தரணி ஆஜரானார். அவர் புலனாய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மேலும் 14 நாள் தடை உத்தரவை கோரினர். குற்றவியல் 106 சட்டத்தின்படி 14 நாட்களிற்கே தடை உத்தரவை வழங்கலாம் எனவும் அதற்கு மேல் நீடிப்பதாக இருந்தால் அமைச்சர் ஒருவரால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் வாதிட்ட இருந்த நிலையில் அதனை அரச சட்டத்தரணி ஏற்றுக்கொண்டதுடன் நேற்று புதன்கிழமையுடன் (05) 14 நாள் முடிவடைவதாக மன்றின் கவனத்திற்கும் அவர் கொண்டு வந்தார். அனைத்தையும் ஆராய்ந்த மன்று நேற்று புதன்கிழமை (05) வரை வழக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சிலை நிறுவுவதற்கும் நேற்று புதன்கிழமை (05) வரை தற்காலிக தடை விதித்து கட்டளை பிறப்பித்திருந்ததுடன் வேறு விண்ணப்பம் யாராவது செய்வதாக இருந்தால் நேற்று புதன்கிழமை (05) செய்யலாம் எனவும் நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தார்.

நேற்று புதன்கிழமை (05) மீண்டும் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வல்வெட்டித்துறை பொலிசாரால் பல விண்ணப்பங்கள் செய்யப் பட்டன.

அதாவது தடை உத்தரவை நீடிக்குமாறு விண்ணப்பம் செய்யாவிட்டாலும் குற்றம் சாட்டப்பட்ட சதீசின் வங்கி விபரம் பெறப்பட வேண்டும் எனவும், பணப்பரிமாற்றம் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பித்தனர்.

அனைத்தையும் ஆராய்ந்த மன்று, குட்டிமணி, தங்கத்துரையின் சிலைகளையும் மற்றும் வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட 53 பேரின் நினைவுத் தூபியினை நிறுவுவதற்கு பருத்தித்துறை நீதிமன்றினால் ஏற்கனவே பிறப்பித்த தடை உத்தரவை வலுவிழக்கச் செய்து கட்டளை பிறப்பித்திருந்ததுடன் வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.

நேற்றைய தின (05) வழக்கில் விஸ்வலிங்கம் மணிவண்ணன், உட்பட்ட நான்கு சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button