மைத்திரியை தப்பிக்க வைக்க முயற்சியா?; சட்டமா அதிபர் திணைக்களம் மீது குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதான நிலந்த ஜயவர்தன ஆகியோர் விசேட மேல்நீதிமன்றத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இணைக்கப்படாமல் இருந்துள்ளனர் என்றும், இந்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்விக்கான செலவீனத் தலைப்பு மீதான குறைநிரப்பு பிரேரணை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது முஜிபூர் ரஹ்மான் எம்பி மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும் எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2019ஆம் ஆண்டில் விஜித மலல்கொட அறிக்கைக்கமையவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் 14 பேருக்கு வழக்கு தொடருமாறு கூறப்பட்டிருந்தது. அதில் இருவருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு 2022 ஆம் ஆண்டில் கோதாபய ராஜபக்ஷ காலத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், அதில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டில் அந்த வழக்கை தொடர்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்தது. இந்நிலையில் அடிப்படை உரிமை வழக்கொன்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் 2019இல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2022இல் நிறைவடைவதுடன், அதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பூஜித ஜயசுந்தர, சிசிர மென்டிஸ், ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர். இதன்போது பொறுப்புகளை மீறியதாக அப்போது மைத்திரிபால சிறிசேன, பூஜித ஜயசுந்தர உள்ளிட்டோருக்கு நஸ்ட ஈடு விதிக்கப்பட்டது. ஆனால் அப்போது உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் இணைக்கவில்லை. இதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் வேண்மென்றே தனது கடமையை மீறியுள்ளது. தண்டனை வழங்கப்பட வேண்டிய இருவரை விடுவித்துள்ளது. அவ்வாறு எப்படி நடக்க முடியும்.
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் நிலந்த ஜயவர்தன தொடர்பிலும், மைத்திரிபால சிறிசேன தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை. சம்பவம் நடக்கும் போது பாதுகாப்பு அமைச்சு, முப்படைகளும் மைத்திரிபால சிறிசேனவிடமே இருந்தது. அவர் எப்படி இதில் இ ருந்து வில முடியும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும். அந்த விசாரணைகள் நடக்கும் போதே 2022இல் தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் எப்படி விடுவிக்கப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களம் தெளிவாக தனது கடமைகளை மீறியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவரை விடுவித்துள்ளது. இப்படி இருக்க முடியாது. சட்டவாட்சி அரசாங்கத்தின் கீழ் அப்படி தப்பிச் செல்ல இடமளிக்க முடியாது.
இப்போது இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் இதில் தொடர்புடைய, இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்று சாட்சியங்கள் உள்ள மற்றும் ஆணைக்குழு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயற்டுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
![]()