இலங்கை

சலேவின் மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இடைபுகுந்து சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட இடையீட்டு மனுக்களை, மேலதிக பரிசீலனைக்காக இம்மாதம் 06 ஆம் திகதி அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

 

மனுதாரர் சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, இந்த இடையீட்டு மனுக்களுக்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

மேலும், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தமது கட்சிக்காரருக்கு எதிராக இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்தையையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

எனினும், பிரதிவாதியான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த இடையீட்டு மனுக்களை பரிசீலிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

 

சில முன்வழக்குத் தீர்ப்புகளை மேற்கோள்காட்டிய அவர், அதனடிப்படையில் இந்த இடையீட்டு மனுக்களுக்கு அனுமதி வழங்க முடியாது என வாதிட்டார்.

 

எவ்வாறாயினும், இந்த இடையீட்டு மனுதாரர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பிலும் நீதிமன்றம் கவனம் செலுத்தும் எனத் தெரிவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், சுரேஷ் சலேவின் மனுவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து இடைக்கால மனுக்களையும் நீதிமன்றம் செவிமடுக்கும் என்றும், அதற்கான சமர்ப்பணங்களை 10 நிமிடங்களுக்குள் முடிக்குமாறும் சட்டத்தரணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button