கட்டுரைகள்

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!…  விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!…  தொடர- 10….. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

பல நூற்றாண்டுகளுக்கு முன் நூறு மீட்டர் உயரமும் ஏழு அடுக்குகளும் கொண்ட மிகவும் பெரிய மரத்திலான பகோடா என்ற இரட்டைக் கோபரங்கள் இருந்தன. அன்றைய கால கட்டத்தில் அதுதான் உலகிலேயே மரத்திலான பெரிய கட்டிடமாகும். எதிர்பாராமல் ஏற்பட்ட நிலச்சரிவு, தீ மற்றும் மின்னலால் அவை அழிந்து போயின.

இன்று அதே இடத்தில் சிறிய கண்களைக் கவரும் நிறத்துடன் இந்திய தொன்மையான தூபிகளின் அடிப்படையில் நவீன முறையில் திரும்பவும் கட்டப்பட்டுள்ளது. இது தனித்துவமாக தங்கம்போன்ற மஞ்சள் நிறத்துடன் குடை போன்று உச்சியில் கோபுரவடிவில் இருப்பதால் வரலாற்று வழிவந்த பழைய கோபரத்தை தழுவியதாக
காண்படு கிறது.

அசோக தூபியை நினைவுச் சின்னமாக இங்கே நிறுவியிருப்பதன் காரணத்தைப் பார்ப்போமா? புத்தமதம் இந்தியாவில் தோன்றியபோதும் அதற்குண்டான அங்கீகாரம் அன்று அங்கு வழங்கப்படவில்லை. அதன் காரணத்தை மதம் மற்றும் வரலாற்றைப் படித்தவர்கள் அறிவார்கள். உண்மையையும் ஒளியையும் மறைத்துவிட செய்துவிட முடியாது.

அதனால் புத்தமதம் இந்தியா தாண்டி நன்றாகப் பரவியது. சிறப்படைந்த பின் உரிமை கொண்டாடுவது வழக்கம்தானே. புத்தமதம் பேரரசர் அசோகர் காலத்தில் உச்சம் பெற்றிருந்தது. புத்த மதத்தில் சிங்கத்தின் பொருள் அரசு, அச்சமின்மை மற்றும் உச்ச அதிகாரம் போன்றவற்றின் பொருளாகும். அதனால் தான் புத்த மதத்தைப் பரப்ப்பும் வகை அடயாளமாக அசோக தூபியின் உச்சியில் சிங்கமுகம் செதுக்கப் பட்டது.

நான்கு சிங்கமுகத்தின் அடையாளம் நான்கு திசைகளிலும் புத்தமதத்தைப் பரப்ப வேண்டும் என்பதாகும். ஆனால் நாம் அசோக தூபியின் சிங்கமுகத்தை எடுத்து புத்தமதத்தை நாடுகடத்தினோம். ஆனால் அசோகரின் விருப்பப்படி புத்தமதம் வடக்கே சீனா தெற்கே இலங்கை கிழக்கே ஜப்பான் என்று பரவத் தொடங்கியது.

இதேபோல்தான் தமிழ் மொழியும். செம்மொழி என்ற அங்கீகாரத்தை மட்டும் அரசு கொடுத்தது. அதற்குண்டான சிறப்பைத் தரவில்லை. ஆனால் தமிழ் தன்சிறப்பால் உலகம் முழுக்க பரவியுள்ளது. எனவே எதன் சிறப்பையும் எவர் சிறப்பையும் திட்டமிட்டு அழித்து விடமுடியாது.

சிங்கமுகத்தையுடைய அசோக தூபியை ஜப்பானிலுள்ள நாராவிலுள்ள நாராபார்க் டோடைஜி டைஷாவில் நிறுவியிருப்பதன் காரணம் புத்தமதம் இந்தியாவில் தோன்றிய இந்திய மதம் என்பதையும் அது ஜப்பான்வரை பரவியுள்ளது என்பதையும் உறதிப் படுத்துவதற்காகும். அதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையே உண்டான தொடர்பும் நிலைநாட்டப் படுகிறது.

இதற்கும் மேலாக இன்னொரு காரணமும் உள்ளது. ஜப்பானிலுள்ள புத்த இளைஞர் சங்கத்தினரால் 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் நாள் புத்தரின் பிறந்தநாளான்று நிறுவப் பட்டது. அன்று ஆயிரம் புத்த துறவிகள் நடத்திய சேவையை நினைவுகூறும் முகமாகவும் இந்த நினைவுச் சின்னத்தை நிறுவினார்கள்.

பல்வேறு பிரிவைச் சார்ந்த 1700 புத்த துறவிகள் அன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். இந்த நினைவுச் சின்னத்தின் கீழ் காலப்பெட்டகம் ஒன்றையும் புதைத்து வைத்துள்ளார்கள். இப்பெட்டகத்தில் புத்த துறவிகளுக்கான கடிதங்களும் தகவல்களும் உள்ளன. இப்பெட்டகம் 2038ல் ஜப்பானில் புத்தமதம் பரவ ஆரம்பித்த 1500ஆவது ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டு திறக்கப்படும்.

ஒன்றைக் கவனித்தீர்களா இந்த மதங்கள் எல்லாம் ஏதாவது ஒரு வழியில் ஏதோ ஒரு புள்ளியில் இணைவது புரியும். இங்கும் காஞ்சிபரத்தில் உள்ள அத்திமரத்தால் செய்யப்பட்ட மூலவரான வரதராஜப் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தினடியில் வைக்கப்படுகிறார். இவரை நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து எடுத்து நாற்பத்தெட்டு நாட்கள் பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கிறார்கள்.

அதன்பின் திரும்பவுத் தெப்பக்குளத்துக்குள் சென்றுவிடுவார். இப்படித்தான் நடக்கும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டதை அவர் கடவுளாகவே இருந்தாலும் மீறமுடியாது என்பது இதிலிருந்து தெரிகிறதல்லவா? சரி, கட்டுரைக்குள் நுழைவோம். நாரா பார்க்கில் எங்கள் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு இனாரிக்கு வந்து இனாரியிலிருந்து கியோட்டோ வந்தடைந்தோம்.

பின் கியோட்டோவிலிருந்து JR லைன்ஸ் மூலம் தொடர்வண்டி மூலம் ஒசாகா வர இரவானது. இரவு உணவை முடத்து விட்டு மறுநாள் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தோம். மறுநாள் உமேடா ஸ்கை பில்டிங் ஒசாகா காஸில் போன்ற இடங்களுக்கு செல்ல முடிவு செய்தோம்.

ஹொம்மாச்சி சரங்கப்பாதை ரயில் மூலமாக மிடாசுஷி ரயிலைப் பிடித்து ஒமேடா சென்று பின் பத்து நிமிட நடைபயணத்தைத் தொடர்ந்து உமேடா ஸ்கை பில்டிங்கை அடைந்தோம். இது ஒசாகாவிலுள்ள வானுயர்ந்த இரட்டைக் கோபுரங்களாகும். இதற்கு இன்னொரு பெயர் குச்சு டெய்யின் அப்சர்வேடரி ஆகும்.

இதில் இரண்டு கோபுரங்களையும் இணைத்து திறந்தவெளியாக நாற்பதாவது மாடியில் 360 டிகிரியிலும் “ஸ்கை வாக்” செய்து பார்க்கும்படி நாற்பதாவது மாடியில் உள்ளது. 39வது மாடியில் உணவகங்கள் மற்றும் நாற்பதாவது மாடியில் திறந்தவெளயாகவும்.

38வது மாடிவரை இலவசமாக செல்லலாம். நாற்பதாவது திறந்தவெளி கடைசித் தளத்துக்கு செல்ல நுழைவுக்கட்டணம் 2000 யென். காலை 9.30 மணியிலிருந்து இரவு 10.30 வரை திறந்திருக்கும்.

கிட்டத்தட்ட மூன்று நான்கு மணி நேரத்தை செலவிட்ட பிறகு அங்கிருந்து ஒசாகா காஸில் என்ற அரண்மனைக்கு செல்ல முடிவு செயதோம். ஆனால் அதற்கு இரண்டு மூன்று ரயில்கள் மாறிச் சென்றாலும் ஒரு குறிப்பிட்ட இடம் வரையே செல்லவேண்டும். அதன்பின் சற்று அதிகமாகவே நடக்கவேண்டும். அதனால் நேரத்தின் அவசியம் கருதி வாடகை வாகனத்தில் சென்றோம்.

இந்த அரண்மனை ஜப்பானில் மிகவும் குறிப்பிடத்தக்க இடமாகும். பதானாறாம் நூற்றாண்டில் ஒருங்கிணைந்த ஜப்பானக மாறுவதற்கு பெரும்பங்கு ஆற்றியுள்ளது இதன் சிறப்பாகும். பதினைந்து ஏக்கர் பரப்பளவில் பதின்மூன்று கட்டமைப்புக்களை கொண்டது இந்த அரண்மனை. இந்த அரண்மனையைச் சுற்றி அகழியும் இருக்கிறது.

இத்த சிறப்பான கோபுரம் போன்ற தோற்றமும் 55 மீட்டர் உயரமுடைய அரண்மனையில் கீழ்த்தளங்களில் வரலாற்று சிறப்பினைக் கூறும் அருங்காட்சியகம் உள்ளது. அத்தோடு பரந்து விரிந்து கிடக்கும் நவீனமான வானுயரக் கட்டிடங்களை பார்வையிட தளம் ஒன்றும் உள்ளது. காலை 9மணி முதல் மாலை 5மணிவரை திறந்திருக்கும் இந்ந அரண்மனையைப் பார்க்க நுழைவுக் கட்டணம் 600யென் ஆகும்.

(தொடரும்… )

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button