உலகம்

பாலியல் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை; மக்கள் கொந்தளிப்பால் பின் வாங்கிய அரசாங்கம்!

பிரித்தானியாவில் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார்களைச் சீரழித்த கொடூர குற்றவாளிகளை, முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யும் திட்டத்திலிருந்து பிரிட்டன் அரசாங்கம் அதிரடியாகப் பின்வாங்கியுள்ளது.​

பிரிட்டனில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகளவில் நிரம்பி உள்ளதால் நெருக்கடியைச் சமாளிக்கவும், சிறை அறைகளில் இடவசதியை ஏற்படுத்தவும், குற்றவாளிகளின் தண்டனைக் காலத்தைக் குறைத்து, அவர்களை முன்கூட்டியே விடுவிக்க பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்தது.

இந்தத் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளும் பயன்பெறக்கூடும் என்ற தகவல் வெளியானதும், நாடு முழுதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கொடூர மனப்பான்மை கொண்ட குற்றவாளிகளை இப்படி சட்டத்தின் பிடியிலிருந்து சீக்கிரமாக வெளியே விட்டால், சமுதாயத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை எனப் போராட்டத்தில் குதித்தனர்.

மக்களின் இந்த பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து, பிரிட்டன் அரசு உடனடியாகத் தன் முடிவை மாற்றிக்கொண்டது.​கற்பழிப்பு, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற படுபாதகச் செயல்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளுக்கு, இந்த முன்கூட்டியே விடுதலை சலுகை கிடையாது என்றும், அவர்கள் தண்டனைக் காலம் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button