பலதும் பத்தும்

தொப்பியை கழட்டிய மாப்பிள்ளை ; அதிர்ச்சியில் மாமியார்

சபரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 63 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் ஒருவரின் இரண்டாவது மகள் பட்டதாரிப் பெண்ணாவார். இவருக்கு இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை. இதற்கிடையில், இவர் 34 வயதுடைய தொழிலதிபர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

அந்தத் தொழிலதிபரின் நெற்றிப் பகுதியிலிருந்து தலைமுடி முழுவதும் கொட்டியுள்ளது. இதனை மறைப்பதற்காக அவர் அதிக விலை கொடுத்து, யாருக்கும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் நுணுக்கமாகப் போலி முடியைப் (விக்) பொருத்திப் பயன்படுத்தி வந்துள்ளார். தனது காதலனின் இந்த இரகசியத்தை ஆரம்பக் காலத்திலேயே காதலி (பட்டதாரிப் பெண்) தெரிந்து வைத்திருந்தார்.

இரு தரப்பினரின் ஆசிர்வாதத்துடன் கடந்த மே மாதம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணமகன், மணமகளைக் குருநாகலில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், ஒரு நாள் இந்தப் புதிய தம்பதியினர் காரில் மனைவியின் தாயின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மணமகன் போலி முடிக்குப் பதிலாகத் தொப்பி ஒன்றை அணிந்து வந்திருந்துள்ளார். மாமியார் எதிர்பாராத விதமாக அவர் தொப்பியை கழட்டியிருந்ததைக் கவனித்துள்ளார். மருமகனுக்குத் தலையில் முடிகளே இல்லை, அவர் ஒரு வழுக்கையன் என்பதைப் பார்த்த தாய் கடும் கவலை அடைந்துள்ளார்.

பின்னர் மருமகனிடம் சென்ற தாய், “என் மகளைத் திருமணம் செய்திருப்பது ஒரு வழுக்கையான மனிதனா? இது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் இந்தத் திருமணத்திற்கு நான் கண்டிப்பாகத் தடை போட்டிருப்பேன்” என்று கோபமாகக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டுச் சில நிமிடங்கள் தலைகுனிந்து நின்ற அந்த இளைஞர், யாரிடமும் எதுவும் சொல்லாமல் அறைக்குச் சென்று தனது மனைவியிடம் நடந்ததைக் கூறியுள்ளார். உடனே மனைவி தன் தாயிடம் வந்து, “அம்மா, என் கணவருக்குத் தலைமுடி இல்லாவிட்டால் என்ன? அவர் ரொம்ப நல்லவர், கள்ளங்கபடம் இல்லாத நேர்மையான மனிதர். இனிமேல் அவரைப் பார்த்து எதுவும் சொல்லாதீர்கள்” என்று உறுதியாகக் கூறியுள்ளார். அதன் பின்னர் தாய் மகளிடம் வேறு எதுவும் பேசவில்லை என தெரியவந்துள்து.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button