மீன் மழையில் நனைந்த மக்கள்

தெலங்கானா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையின் போது, வானத்திலிருந்து மழைநீருடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான மீன்கள் கொட்டிய விசித்திர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சேரியல் மாவட்டம், சென்னூர் பகுதியில் பெய்த பலத்த மழையின் போது, துப்புலா அனுமன்தெருவில் திடீரென வானத்திலிருந்து மீன்கள் கீழே விழுந்துள்ளன. சாலையெங்கும் துள்ளிக் குதித்த இந்த மீன்களைப் பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு கைகளால் அள்ளிச் சென்றுள்ளனர். சிலர் தங்களது குடைகளைத் தலைகீழாகப் பிடித்து மீன்களைச் சேகரித்துள்ளனர். இந்த அரிய நிகழ்வின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நீர்நிலைகளின் மேல் பலத்த சூறாவளி அல்லது சுழற்காற்று வீசும்போது, அது ஓர் உறிஞ்சுக் குழாய்போலச் செயல்பட்டு நீரிலுள்ள சிறிய ரக மீன்கள், தவளைகள் போன்ற உயிரினங்களை வளிமண்டலத்திற்கு மேலே இழுத்துச் செல்கிறது. பின்னர், புயல் மேகங்களின் காற்று நீரோட்டம் குறைந்து மழையாகப் பெய்யத் தொடங்கும்போது, காற்றில் மிதந்து கொண்டிருந்த மீன்கள் மழைநீருடன் சேர்ந்து தரையில் விழுகின்றன. வானிலை ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வை ‘நீர்ச்சுழற்காற்று’ (Waterspout) என்று விளக்குகின்றனர்.
![]()