கவிதைகள்

நீயின்றி நானேது… கவிதை…. முத்தழகு கவியரசன் , திருநெல்வேலி

எப்படித் தொடங்குவதென்று
எனக்குத் தெரியவில்லை – இருந்தபோதிலும்
அந்த நாட்களைத் திரும்பவும்
அலசிப் பார்க்கிறேன்
எல்லாம் நினைவில்
நிழலாடுகிறது.

இத்தனை வருடங்கள்
கழிந்தப் பின்னும்
உன் முந்தானையின் அனைப்பும் – அவ்வாசமும்
என்னை விட்டு விலகவே இல்லை

மடியில் கிடத்திவிட்டு
கதை கதையாக ஊர்கதை சொன்னாய்
நித்திரைக் கொள்வதற்கு

ஏதாவது தவறு செய்தால்
ஓர் அதட்டலில் – என் கண்களில்
குளமாக்குவாய் – பின்பு நீயும்
அக்குளத்தில் மூழ்கி
மார்போடு அணைப்பாய்

நீராட வைக்கும்போதெல்லாம்
நீ படும் பாட்டைப் பார்த்து
என் கன்னக்குழிகள் – அழகை
உள்வாங்கிக் கொள்ளும்
பெரியவளான பின்பு
உன்னை எப்படிக் கரைசேர்ப்பது
கண்களில் கண்ணீர் பொங்கினாய்
விட்டு விலகுதல் பொதுவானதுதானே!
சற்று நேரம் கழித்து – எனக்கும் சமாதானம்
சொல்லிக்கொண்டாய்

அடுப்புப்புகை என்மேல் படவிடாமல்
தாளம்பூவாக தலையில் வைத்து கொண்டாடினாய்

எப்போதும் பெண்ணென்பவளுக்கு
இருவீடுகள் சொந்தமாவது
வாழ்க்கை நியதி என்று பாடம் புகட்டித் தந்தாய்

உன்னருகில் நானிருந்தபோதும்
என்னருகில் நீயிருந்தபோதும்
உலகமே ஒன்றில்லை என்றவளுக்கு
அன்று நீ தந்தப்பரிசு
வேதனைதான்!

பிரிவென்பதை யாரும் தடுத்து
நிறுத்த முடியாது
அன்று மருத்துவ மனையில்
ஓடோடி வந்தவளுக்குக் கடைசிக் கட்டிலில்
என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்தாய்
பலவிதமான காட்சிகள்
கண்களில் ஊடாடி விளையாடின

என்ன சொல்வது
ஞாபகங்களை யாராலும் அழிக்க முடியாதுதானே?
உன் பார்வைகள்
உன் மொழிகள்
உன் அரவணைப்புகள்
நீ கற்றுத்தந்த பாடங்களையெல்லாம்
கற்றுக்கொடுக்கத் தயாராகுகிறேன்

இப்போது
என் மடியில்
அழகாகச் சிரித்துக்கொண்டிருக்கிறாய்.
நீயின்றி நானேது……..

(ஒரு பெண்ணின் மனப் படிமமாய் எழுதியது)

முத்தழகு கவியரசன் , திருநெல்வேலி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button