தேசிய மக்கள் சக்தியில் வெளிப்படைத்தன்மை இல்லை முடிவுகள் எடுக்கப்படும் இடம் எதுவெனத் தெரியாது

தேசிய மக்கள் சக்திக்குள்(என்.பி.பி.)வெளிப்படைத்தன்மையான முடிவெடுக்கும் செயல்முறையை தான் காணவில்லை என்றும், முடிவுகள் எங்கோ ஒரு இடத்தில் எடுக்கப்படுவதாகத் தோன்றினாலும், அந்த முடிவுகள் எங்கு எடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ மற்றும் செயற்குழு உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சிக்கும் வகையில் தான் கருத்து தெரிவித்த நிலையில், அவ்வாறாக விமர்சிக்காமல் மௌனமாக இருக்குமாறு அமைச்சர் கே.டி. லால்காந்த தனக்கு கூறியதாகவும் லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே லால் விஜேநாயக்க இதனைக் கூறியுள்ளார்.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீதித்துறையின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்து வந்த ஒருவராக, இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்க முடியாது என லால் விஜேநாயக்க அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் லால் காந்த தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இந்த வேண்டுகோளை விடுத்ததாகவும், பின்னர் தனது நிலைப்பாட்டை விளக்கி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.தேசிய மக்கள் சக்தியின் தலைமையுடன் உள்ள தனிப்பட்ட பிணக்கினால் அல்லாமல், கொள்கை ரீதியான காரணங்களினாலேயே தான் இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாக விஜேநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 50 ஆண்டுகள் லங்கா சமசமாஜக் கட்சியுடன் இணைந்து பணியாற்றிய தான், முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் பரந்த அளவிலான கலந்துரையாடல்களை நடத்தும் நடைமுறைக்கே பழகியுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்திக்குள் அத்தகைய வெளிப்படைத்தன்மையான முடிவெடுக்கும் செயல்முறையை தான் காணவில்லை என்றும், முடிவுகள் எங்கோ ஒரு இடத்தில் எடுக்கப்படுவதாகத் தோன்றினாலும், அந்த முடிவுகள் எங்கு எடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் பிரச்சனை அங்குதான் உள்ளது என்றும் லால் விஜேநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
![]()