இலங்கை

முன்னாள் அமைச்சர் மேர்வினிடம் 600 மில். ரூபா சொத்துக்கள் எப்படி வந்தது?

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்கள் தொடர்பான வழக்கில், அவர் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அவரால் அரசியல் அதிகாரங்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான முறையில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அந்த வழக்குடன் தொடர்புடைய நீதிமன்ற அறிக்கைகளுக்கமைய அவரின் சந்தேகத்திற்கிடமான சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்ற அறிக்கைகளின்படி, பான் ஏசியா வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளையில் 1,823 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையைக் கொண்ட 10 நிலையான வைப்புகளைப் மெர்வின் சில்வா பேணி வந்துள்ளார். இதில் ஒரு வைப்பின் மதிப்பு மட்டுமே 6 கோடி ரூபாவாகும். அத்துடன், அவரது மனைவியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மேரி லூசிடா சில்வா, மகன் மாலக சில்வா, மகள் மற்றும் மருமகன் ஆகியோரின் பெயர்களில் பல்வேறு நிதி நிறுவனங்களில் பல மில்லியன் ரூபா வைப்புகளை பேணி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதேபோன்று கொழும்பு 07 குருந்துவத்தை பகுதியில் 71.3 மில்லியன் ரூபா மதிப்பிலான காணியையும், இராஜகிரிய நாவல வீதியில் 39.2 மில்லியன் ரூபா மதிப்பிலான காணியையும், கடவத்தை பகுதியில் 13 மில்லியன் ரூபா மதிப்பிலான காணியையும் கொள்முதல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2010 முதல் 2012 வரையிலான குறிப்பிட்ட இரண்டு வருட காலத்தில் பிரதிவாதி அசாதாரணமான முறையில் 7 அதி சொகுசு வாகனங்களைக் கொள்முதல் செய்துள்ளார்.

அத்துடன் தனது இரண்டு கடன் அட்டைகள் மூலம் இரண்டு வருடங்களில் 42 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதோடு, மூலாதாரம் வெளிப்படுத்தப்படாத 34.7 மில்லியன் ரூபா கடனையும் செலுத்தி முடித்துள்ளார்.

மேலும், ரிது ஆகர்ஷா என்ற நடிகைக்காக 240,000 ரூபா பணம் வழங்கியமை மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக ஆண்டிற்கு 13 லட்சம் ரூபா தவணைப் பணம் செலுத்தி 6 காப்புறுதி கணக்குகளை பேணி வந்தமை தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு ஆண்டுகள் போன்ற குறுகிய காலத்தில் 485 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெருந்தொகை சொத்தை எவ்வாறு சம்பாதித்தார் என்பது குறித்து வரவிருக்கும் வழக்கு விசாரணைகளின் போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button