உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக பூஜித, ஹேமசிறிக்கு மரண தண்டனை; நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை மற்றும் கொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இவர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் அறிவிக்கப்பட்ட போது பெரும்பான்மையான நீதிபதிகள் இவர்கள் இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் , மட்டக்களப்பு சியோன் தேவாலயம் , நீர்கொழும்பு கட்டான கட்டுவபிட்டிய தேவலயம் ஆகியவற்றிலும் மற்றும் கொழும்பு ஷங்கிரில்லா , சினமன்ட் கிரேன்ட் , கிங்ஸ்பெரி ஆகிய வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் பிரபல ஹோட்டல்களையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 268 பேர் உயிரிழந்ததுடன், 586 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக பல்வேறு வழிகளிலும் நடத்தப்பட்ட விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தரப்பினர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும், இந்த தாக்குதலை தடுக்கத் தவறியதாக குற்றஞ்சாட்டி அந்தக் காலப்பகுதியில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி பூஜித் ஜயசுந்தர மற்றும் அப்போதுதை பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதன்படி போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், பொறுப்பைத் தட்டிப் கழித்து 275 பேர் உயிரிழப்பதற்கும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைவதற்கும் வழிவகுத்தமை தொடர்பில் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 855 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி அவ்வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள் குழாம் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்திருந்தது.
பிரதிவாதிகளின் சாட்சியங்களைக் கோராமலேயே வழங்கப்பட்ட அத்தீர்ப்பில், தாக்குதல் தொடர்பான தெளிவான உளவுத் தகவல்களை வழங்க அரச புலனாய்வுச் சேவை தவறியுள்ளதாகவும், இதன் மூலம் அன்றைய அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தனது பொறுப்புகளைத் தட்டிப் கழித்துள்ளார் என்றும் மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் சுட்டிக்காட்டியிருந்தது.
இத்தகைய பின்னணியில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் அலட்சியப் போக்கு குறித்த குற்ற நோக்கத்தை நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறியுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.
மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் வழங்கிய அத்தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அது உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
பின்னர், 2024 நவம்பர் 05 ஆம் திகதி தனது தீர்ப்பை வழங்கிய ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்து மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, மீண்டும் வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சியங்களைப் பெறுமாறு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதற்கமைய, பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோரைக் கொண்ட கொழும்பு விசேட மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பிரதிவாதிகளின் சாட்சியங்கள் கோரப்பட்டு வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்பட்டது.
நீண்ட விசாரணைகளின் பின்னர், அவ்வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை பிற்பகல் அறிவிக்கப்பட்டது.
பூஜித ஜயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு
இதன்போது முதலில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை, கடமையைத் தவறவிட்டமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அவர், பெரும்பான்மை நீதிபதிகளால் அறிவிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பட்டது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதிகளான பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பூஜித் ஜயசுந்தர குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள் குழாத்தின் தலைவரான நீதிபதி பிரியந்த லியனகே தெரிவிக்கும்போது,
“உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்னரே உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் கடமையைத் தவறவிட்டமையால் 268 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 586 பேர் காயமடைந்துள்ளனர். அந்தக் காலப்பகுதியில் நாட்டின் பொலிஸ் மா அதிபராக இந்த பிரதிவாதியே கடமையாற்றினார்.
பிரஜைகளைப் பாதுகாப்பதும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதும் இவரது பொறுப்பாகும். எனினும், 2019 ஏப்ரல் 20ஆம் திகதி மாலையில், அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால், உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பிரதிவாதிக்கு உளவுத் தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும், அந்தச் சூழ்நிலையைத் தடுப்பதற்கு அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றங்களைத் தடுப்பதற்காக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்ற ரீதியில் அவர் தனது பொறுப்பைத் தவறவிட்டுள்ளார்” எனக் குறிப்பிட்ட பெரும்பான்மை நீதிபதிகள் குழாம், பிரதிவாதி செய்த குற்றத்தின் தன்மையைக் கருத்திற் கொண்டு அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.
எவ்வாறாயினும் தனது தீர்ப்பை அறிவித்த நீதிபதி விராஜ் வீரசூரிய, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும், எனவே அவரை விடுவித்து விடுதலை செய்வதாகவும் அறிவித்தார். எனினும் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு அவரை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
ஹேமசிரி பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு
இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இதன்போது உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்னரே உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் கடமை தவறியமை மற்றும் 268 பேர் உயிரிக்கவும் மேலும் 586 பேர் காயமடையவும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக நீதிபதிகள் குழாமால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அறிவிக்கப்பட்டதுடன், அதன்படி அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
![]()