ஆய்வேட்டில் ரத்தம்…. கவிதை…. முத்தழகு கவியரசன், திருநெல்வேலி

முனைவர் பட்டத்துக்கு வந்தேன்
நீ முன்னேற்றத்தை கேட்டாய்.
நான் அறிவைத் தேடி வந்தேன்
நீ என் உடலைத் தேடினாய்.
“நெறியாளர்” என்ற பெயரில் நீ,
நெறிகளை எல்லாம் கொன்றாய்.
ஆய்வு கூடத்தின் கதவைச் சாத்தி,
என் ஆன்மாவின் கதவை உடைத்தாய்.
“பட்டம் வேண்டுமா?” என்றாய்,
படுக்கையை காட்டினாய்.
“வழிகாட்டுகிறேன்” என்றாய்,
வழிதவறி என்னை இழுத்தாய்.
உன் பார்வையில் காமம் இருந்தது,
என் பார்வையில் கனவு இருந்தது.
நீ கனவை கலைத்தாய்,
நான் காமத்தை கருக்கினேன்.
அழுதேன். உடைந்தேன். செத்தேன்.
ஆனால் புதைக்கப்படவில்லை.
சாம்பலில் இருந்து எழுந்தேன்,
சாபமிட வந்த சக்தியாய்.
இன்று நான் பேசுகிறேன்.
பயந்து ஒளியும் பெண் இல்லை,
பார்த்து கேள்வி கேட்கும் பேராசிரியை நான்.
பல்கலைக்கழகம் கோயில் இல்லை,
சில பேராசிரியர் சாமி இல்லை.
அறிவை விற்கும் நிறுவனத்தில்
பெண்ணின் உடலை விலை பேசுகிறார்கள்.
ஆய்வேடு முடியவில்லை,
ஆனால் ஆயுதம் கூர்மையானது.
பட்டம் தாமதமாகலாம்,
ஆனால் போராட்டம் தொடங்கிவிட்டது.
நான் ஒருத்தி மட்டும் இல்லை,
ஆயிரம் குரல்களின் எதிரொலி.
என் மௌனம் உடைந்தால்,
உன் முகமூடி கிழியும்.
இனி எந்தப் பெண்ணும்
“நெறியாளர்” என்ற வார்த்தைக்கு நடுங்கக் கூடாது.
“ஆய்வு” என்ற சொல்லுக்கு அழக்கூடாது.
கல்வி என்பது கற்பை கேட்கும் இடமில்லை,
கனவை வளர்க்கும் இடம்.
என் ரத்தத்தால் எழுதுகிறேன்,
என் ரணத்தால் சொல்கிறேன்:
பெண்ணை தொடாதே,
பேனாவை தொடு.
உடலை கேட்காதே,
உண்மையைக் கேள்.
இது என் கதை இல்லை,
இது நாளை நம் வீட்டு கதை ஆகும் முன்
விழித்துக்கொள்.
நான் வீழ்ந்தவள் இல்லை,
வீறு கொண்டு எழுந்தவள்.
நான் பாதிக்கப்பட்டவள் இல்லை,
பாடம் புகட்ட வந்தவள்.
(ஒரு பெண்ணின் மனப் படிமமாய் எழுதியது)

![]()