பலதும் பத்தும்

வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு; தெரியாத நபர்களுடன் கட்டிலைப் பகிரும் சீன இளைஞர்கள்!

சீனாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக, இளைஞர்கள் தங்களது மாதாந்தச் செலவுகளைக் குறைப்பதற்கு ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு வருகின்றனர். முன்பின் தெரியாத நபர்களுடன் ஒரே அறையை மாத்திரமன்றி, ஒரே கட்டிலையும் பகிர்ந்துகொள்ளும் (Bed-sharing) போக்கு தற்போது சீனா இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.

மத்திய சீன நகரமான வூஹானைச் (Wuhan) சேர்ந்த 25 வயதான வின்னி செங் (Winnie Zeng) என்ற பெண், நேரலை விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார். தனது மாதாந்த வருமானமான 4,000 யுவானில் கணிசமான தொகையைச் சேமிப்பதற்காக, தனது படுக்கையறையை மற்றொரு பெண்ணுடன் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்துள்ளார்.

இதன் மூலம் தனது மாதாந்த வாடகையில் 450 யுவானைச் (சுமார் 66 அமெரிக்க டொலர்) சேமிக்கும் அவர், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவே இத்தகைய கடினமான முடிவை எடுத்ததாகக் கூறுகிறார்.

பீஜிங்கில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிறுவனமொன்றில் பணியாற்றி வேலை இழந்த 39 வயதான மோர்கன் பான் (Morgan Pan) என்பவரும், கட்டுமான நிறுவனத்தின் வீழ்ச்சியால் வேலையிழந்த பல இளைஞர்களும் தங்களது மாதாந்த வாடகையை குறைப்பதற்காக அறைப் பங்கீட்டைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்த போக்கு குறித்து சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான ‘வெய்போ’ (Weibo) மற்றும் ‘டூயின்’ (Douyin) ஆகியவற்றில் “கட்டிலைப் பகிர்வது என்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு துன்பம்” என்ற ஹேஷ்டேக் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அத்துடன் ‘சியோஹோங்ஷு’ (Xiaohongshu) போன்ற செயலிகளில் அறை மற்றும் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளப் பங்காளிகளைத் தேடும் விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் வாழும் சுமார் 260 மில்லியன் வாடகைதாரர்கள் மத்தியில் இந்த போக்கு இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளபோதிலும், இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய பணி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் பணிப்பாளர் மிங்வெய் லியு இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “நகரங்களில் நிலையான வாழ்விடம், நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் தெளிவான வருமான வாய்ப்புகள் இல்லாத சூழலையே இது காட்டுகிறது.

இளைஞர்களின் இந்த மனநிலை தொடருமானால், அது நாட்டின் நுகர்வுச் செலவுகள், சொத்து சந்தை மற்றும் திருமண வீதம் ஆகியவற்றைப் பெருமளவில் பாதித்து, நீண்டகாலப் பொருளாதாரச் சவால்களை உருவாக்கும்” என எச்சரித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button