இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.கடலில் படகுகளில் கறுப்புக் கொடிகளுடன் பெரும் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து நயினாதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஏற்பாட்டில் நேற்றுப் புதன்கிழமை காலை-09 மணியளவில் யாழ் நயினாதீவு குறிகட்டுவான் கடற்பரப்பில் மீனவர்களால் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கண்ணாடி இழைப் படகுகளில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டவாறு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மாதம்- 18 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் தீவகப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்கள் சூறையாடப்பட்டமையைக் கண்டித்தும், தொடர்ந்தும் இடம்பெறும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நெடுந்தீவு, அனலைதீவு, புங்குடுதீவு, வேலணை, எழுவைதீவு, ஊர்காவற்துறை, காரைநகர் மீனவர்கள் போராட்டத்தில் இணைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேற்படி போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர்கள் நேரடியாகக் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
![]()