இலங்கை

கேப்பாபிலவு மக்களை சந்திக்கவுள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் – 36வது நாளாக தொடரும் போராட்டம்

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று  இரண்டாம் கட்டத்தின் 36வது நாளை எட்டியுள்ளது.

கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளும் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை அதிகாரிகளிடமிருந்து நிரந்தரத் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இன்று இரண்டாம் கட்டத்தின் 36வது நாளாக போராடிக்கொண்டிருக்கின்றோம். எமது நியாயமான கோரிக்கைகளை ஏற்று பாதுகாப்பு பிரதியமைச்சர் இவ்விடத்திற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார். அவரின் வருகைக்காக நாம் காத்திருக்கின்றோம்” என தெரிவித்தனர்.

மேலும், தமது காணி விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என நம்புவதாகவும், தமது சாத்வீகமான போராட்டத்திற்கு செவிசாய்த்தமைக்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button