நீதிமன்றங்கள் அனைத்திலும் 11 இலட்சத்திற்கும் மேல் வழக்குகள் தேக்கம்

நாட்டின் நீதிமன்றங்களில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், இந்த வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அதற்கு அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக்கொள்ளவுமே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவிக்கையில்,
நீதிமன்றங்களில் மக்கள் கணிசமான அளவு அலைக்கழிக்கப்படுகிறார்கள். மாதக்கணக்கில், வருட கணக்கில் நீதிமன்றங்களில் வழக்குகள் செல்லும்போது மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அப்படியானால், நீதிமன்றங்களும் ஏனைய அமைப்புகளைப் போலவே திறமையாகச் செயல்பட வேண்டும். அந்தச் செயல்திறனை அதிகரிப்பதற்கு நீதிபதிகளின் வயதை அதிகரிப்பது ஒரு பக்கம் மட்டுமே, இன்னும் பல பக்கங்களில் நாம் தலையிடுகிறோம். முக்கியமாக, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அதை விரைவுபடுத்த வேண்டும். அதுவும் வழக்குகள் முடங்கும் ஒரு இடமாக இருக்கின்றது.
அதேபோல் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். மேலும், நீதி அமைச்சிலும் நீதிமன்றங்களிலும் ஊழியர்கள் இந்த நாட்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருகிறார்கள். இவை அனைத்தையும் செய்வது 11 இலட்சம் வழக்குகள் தேங்கியுள்ள ஒரு கட்டமைப்பு எங்களிடம் உள்ளது என்பதால்தான். இதை விரைவுபடுத்துவது மிகவும் அவசியமான ஒரு விஷயம்.
வளர்ச்சியடைந்த நாட்டில் ஒரு மில்லியன் மக்களுக்கு 40-60 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் இருக்கலாம். ஆனால் இலங்கையில் ஒரு மில்லியன் மக்களுக்கு 20 பேர் மட்டுமே உள்ளனர். எனவே உண்மையில் இந்த நெருக்கடி வர முக்கிய காரணம், 10-15 வருடங்களாக ஒரு முன்னறிவிப்புடன் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்காததால் தான் வழக்குகள் தேங்கியுள்ளன.
இப்போது நாம் ஓய்வு வயதை மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் மட்டும் அதிகரிக்கவில்லை. நீதித்துறைச் சட்டத்தையும் திருத்தி மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள் என அனைவரினதும் வயதையும் இரண்டு வருடங்களால் அதிகரிக்கிறோம். அதிகரிப்பதன் முக்கிய நோக்கம், நீதிமன்ற ஊழியர்கள் அவசியமானது போல அனுபவமிக்க நபர்களால் வழக்குகள் விரைவுபடுத்தப்படும் என்பதாகும்.
1978 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஓய்வூதிய வயது திருத்தம் செய்யப்படவில்லை. பல நாடுகளின் நீதிமன்றங்களில் ஓய்வுபெறும் வயது 70 ஆக உள்ளது. எனவே ஒரு குறிப்பிட்ட அளவை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று யோசித்தோம். நீதிபதிகளின் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க சட்டமும் வளர்ச்சியடையும், வழக்குகளையும் திறம்பட நடத்த முடியும். அந்த அடிப்படையில் தான் ஒட்டுமொத்தமாக இந்த அதிகரிப்பை செய்ய முயற்சிக்கிறோம். இது இன்றோ நேற்றோ வந்த ஒன்றல்ல, 2016 ஆம் ஆண்டிலும் சட்டத்தரணிகள் சங்கம் இதனை யோசனையாக முன்வைத்துள்ளது.
அதேபோல் ரவூப் ஹக்கீம் 2014-2015 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசியுள்ளார். இது 2017 முதலேயே தொழில்முறையில் அடிக்கடி பேசப்பட்ட ஒரு விடயம் என்று நினைக்கிறேன். கடந்த காலங்களில் சட்டத்தரணிகள் சங்கத்தால் எனக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள கருத்துக்களை நாம் கவனத்தில் கொண்டோம். 388 பேர் உள்ள இடத்தில் 65 பேர் வரை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த எதிர்ப்பில் உள்ள கருத்துக்களை கவனத்தில் கொண்டு அந்தப் பிரச்சினைகளையும் நாம் தீர்ப்போம், எதையும் நாம் நிராகரிக்க மாட்டோம்.
இத்தகைய சூழ்நிலையிலேயே இந்தத் திருத்தத்தைக் கொண்டு வருகிறோம். நீதிமன்றத்தின் சுயாதீனம் பாதிக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் அடிக்கடி கூறுகிறார்கள், ஆனால் அது எவ்வாறு நடக்கும் என்பதை அவர்கள் சரியாக விளக்குவதில்லை. உதாரணமாக, நாம் ஒரு தனி நபரைக் இலக்காகக் கொண்டோ அல்லது உயர் நீதிமன்றத்தை மட்டும் இலக்காகக் கொண்டோ செய்தால் அந்த வாதத்தைக் கொண்டு வரலாம், ஆனால் நாம் அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுல பெறும் வயதையும் அதிகரிக்கிறோம் என்றார்.
![]()