இலங்கை

வழக்குகளில் இருந்து தப்பவே ரணில் – சஜித் – நாமல் அணிகள் இணைவு!

நீதிமன்ற வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே ரணில், சஜித், நாமல் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கலாம் எனவும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு முழுமையாகத் தயாராக உள்ளது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புதிதாக ஒன்றிணையவில்லை. கடந்த காலங்களிலும் அவர்கள் ஒன்றிணைந்தே செயற்பட்டார்கள். எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்த போதிலும் மக்கள் அரசுடன்தான் இருக்கின்றார்கள். அண்மைய காலத்தில் வெளிவந்த தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதனைத்தான் உறுதிப்படுத்துகின்றன. தோல்வியடைந்த அரசியல்வாதிகளின் கூட்டமாகவே எதிர்க்கட்சி காணப்படுகின்றது. இதனால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சியால் எங்களுக்கு எவ்வித சவாலும் இல்லை. எதிர்க்கட்சியினர் தங்களை மாற்றிக்கொள்ள ஆயத்தமாக இல்லை, பழைய அரசியல் மற்றும் பழைய சிந்தனைகளையே இன்னமும் பின்பற்றுகின்றார்கள். கடந்த வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பலருக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே அவர்கள் ஒன்றிணைந்திருக்கக்கூடும்.

எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்த போதிலும் நாட்டின் முன்னேற்றம் குறித்தோ அல்லது எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தோ எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை. மாறாக, வழக்குகளில் இருந்து எவ்வாறு தப்புவது மற்றும் மீண்டும் எவ்வாறு அதிகாரத்துக்கு வருவது என்பது குறித்தே பேசினார்கள்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு முழுமையாகத் தயாராகவே உள்ளது. எனினும், சில சட்டப் பிரச்சினைகள் நிலவுகின்றன, அவை தீர்க்கப்பட்டவுடன் தேர்தல்கள் நடத்தப்படும். – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button