மஹிந்தவிற்கு எதிரான 100 கோடி ரூபா ஊழல் குற்றச்சாட்டில் சாட்சியமளித்த முக்கிய பிரமுகர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சாட்சியமளித்துள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் அவர் மூன்று மணித்தியாலங்கள் சாட்சியமளித்துள்ளார்.
இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை ‘ஷாங்க்ரி-லா’ ஹோட்டலுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையின் போது, சுமார் 100 கோடி ரூபா லஞ்சமாகப் பெறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நேற்றைய தினம் லஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அங்கு சென்ற அவர், சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
குறித்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி’ அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசியின் படி, TPL Itma நிறுவனம் மற்றும் Heliat எனும் ஆலோசனைக் நிறுவனம் ஆகியவற்றின் ஊடாக இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜின் வாஸ் குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அப்பணம் தங்கல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் சீ.எஸ்.என். ஊடக வலைப்பின்னலுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக லஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை அழைத்திருந்தது.
வாக்கு மூலத்தில் எவ்வாறான விடயங்களை சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
![]()