இலங்கை

தேசிய பாதுகாப்பு குறித்து எதிரணி கரிசனை

“சிறைச்சாலை அதிகாரிகளையே பாதுகாக்க முடியாத இந்த அரசாங்கத்தால் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியும்.

எனினும், உண்மை நிலவரங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு வாய்ப்பாகவே அதனைப் பயன்படுத்துவோம்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

சுமார் 3 மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார கூறியதாவது:

“மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதே எமது முதன்மை இலக்காகும். அதற்கேற்ற வகையிலேயே எமது நகர்வுகள் அமைந்துள்ளன.

தமக்குரிய மக்கள் செல்வாக்கு 75 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் போலி அறிக்கைகளை வெளியிடாமல், தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்குச் சவால் விடுக்கின்றோம். அப்போது மக்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வரும்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாகச் சிறைச்சாலை அதிகாரிகளே கொல்லப்பட்டுள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்கையில், தேசிய பாதுகாப்பை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்று எவ்வாறு நம்ப முடியும்?

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெறச் செய்வதற்கான பெரும்பான்மை பலம் எங்களிடம் இல்லை. எனினும், அந்த விவாதத்தின் மூலமாக நாட்டில் நிலவும் உண்மை நிலைமையை மக்களுக்கு எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கும்.

அடுத்ததாக நாங்களே ஆட்சியைமைப்போம். எமது ஆட்சி அமைந்த பின்னர் வேண்டுமானால் நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக வரட்டும்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button