பலதும் பத்தும்

‘சாலி’ எனும் AI ஆசிரியை

அடுத்த பாடசாலைப் பருவத்திலிருந்து, அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு, செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் மனித உருவம் கொண்ட ரோபோ ஆசிரியைகளை அறிமுகப்படுத்த நியூயோர்க் பாடசாலை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அமெரிக்கப் பாடசாலைகளுக்கு இத்தகைய ரோபோ ஆசிரியையை அறிமுகப்படுத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனிதர்களைப் போன்றே தோற்றமளிக்கும் இந்த ரோபோ ஆசிரியைகளுக்கு ‘சாலி’ (Sally) என்று பெயரிடப்பட்டுள்ளது. நியூயோர்க்கின் சலமன்கா (Salamanca) பாடசாலை மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளில், இந்தச் சாலி ரோபோக்களைப் பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சில முன்னோடித் திட்டங்கள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்தே, ‘சாலி’ ரோபோ ஆசிரியைகளைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் உள்ள அறிவு மட்டுமல்லாது, சிறு பிள்ளைகளுக்கு நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்கும் திறன் இந்த ரோபோ ஆசிரியைக்கு உள்ளது.

இது குறித்து நியூயோர்க் பாடசாலை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், “சாலி ஒரு துணை ஆசிரியை ஆவார். வகுப்பாசிரியருக்கு உதவியாக இருப்பதற்காகவே அவர் வடிவமைக்கப்பட்டுள்ளார். இரண்டாம் நிலை வகுப்பறைகளில் துணை ஆசிரியராக சாலியைப் பணியமர்த்த எதிர்பார்க்கிறோம். சாலிக்குத் தெரியாத விஷயமே இல்லை” என்று விளக்கமளித்தனர்.

சுமார் 57,600 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாயில் சுமார் 170 இலட்சம்) பெறுமதியான இந்தச் சாலி ரோபோ, கனடாவின் ரொறன்ரோ நகரை தளமாகக் கொண்ட ‘ரியல்போட்டிக்ஸ்’ (Realbotix) எனும் ரோபோ தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

பார்வைக்கு சாலி ஒரு ரோபோ என்று எளிதில் கண்டறிய முடியாது. அவரது தோல் சிலிக்கானால் உருவாக்கப்பட்டுள்ளதுடன், நீண்ட தலைமுடியும் பொருத்தப்பட்டுள்ளது. பல்வேறு உடல் பாவனைகளை வெளிப்படுத்தும் திறன் சாலியிடம் உண்டு. இருப்பினும், சாலி ஒரே இடத்தில் நின்று செயற்படும் ரோபோவாகும்; அவரால் நடமாட முடியாது.

அமெரிக்கக் கல்வி அதிகாரிகளின் அனுமதியுடனும் கண்காணிப்பின் கீழும் இவ்வாறான செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியைகள் பாடசாலைகளில் பணியமர்த்தப்படவுள்ளதாக ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button