மட்டக்களப்பில் 5 கொலைகள்: பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்புl ‘பொலிஸ் பாயிஸிற்கு’தொடர்ந்தும் பிடிவிறாந்து

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 மனிதக் கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டார். அத்துடன், லண்டனில் தலைமறைவாகியுள்ள ‘பொலிஸ் பாயிஸ்’ என்பவருக்குத் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்தும் கட்டளையிட்டார்.
2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் டி.எம்.வி.பி. கட்சியின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் வர்த்தகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், ஏற்கனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்தனர்.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்புடைய பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாயிஸ்’ உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் 2026 ஜூன் 17ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வழக்குத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகிய இருவரையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எனினும், பாதுகாப்பு காரணங்களினால் பிள்ளையானை நீதிமன்றத்திற்கு அழைத்து வர இயலவில்லை எனக் தெரிவித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், இக்கொலைச் சம்பவங்களுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்புச் சபையினருக்கு உள்ள தொடர்புகள் குறித்துத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் சமர்ப்பணம் செய்தனர்.
இதேவேளை, பிள்ளையான் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, பிள்ளையானை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கடந்த வழக்கு விசாரணையின் போது முன்வைத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதவான், வழக்கை ஆராய்ந்த பின்னர் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையுடன் சூம் (Zoom) இணையவழிக் காணொலி ஊடாகத் தொடர்பினை ஏற்படுத்திப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் உட்பட மூவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும், ‘பொலிஸ் பாயிஸ்’ என்பவருக்குத் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்தும் நீதவான் கட்டளையிட்டார்.
![]()