தமிழ் முஸ்லிம்களுக்கு அரசியல் நியாயம் வழங்கத் தயாரா?; அரசு கூற வேண்டும் – நிசாம் காரியப்பர் எம்.பி.

83 ஜூலை கலவரம் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அரசியல் நியாயத்தை வழங்க தயாரா என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அதிகார பரவலாக்கம் மூலம் அரசியல் தீர்வு வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தயார் இல்லை என்பதுதான் உண்மை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கறுப்பு ஜுலை இனக்கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
இந்த நாட்டில் சிங்களம் மட்டுமே அரச மொழி என்ற சட்டத்தை எஸ். டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க கொண்டுவந்ததே முதலாவது கறுப்பு ஜூலை. இரண்டாவது கறுப்பு ஜூலைதான் 1983 ஜூலை 23ஆம் திகதி ஜே.ஆர் ஏற்படுத்திய இனக் கலவரம். அதற்கு அவர் பொறுப்பு கூறவேண்டும். அடுத்த ஜூலை கலவரம்தான் 1987 ஜூலை 29 கலவரம். அதற்கு ஜே.வி.பி பொறுப்பு கூறவேண்டும். அதேபோன்று தமிழ் மக்களுக்கு குறைந்த நிவாரணமாக மாகாணசபையை வழங்கிய ராஜிவ்காந்தி இலங்கைக்கு வந்தபோது அவரை தாக்கிய தினம் ஜூலை 27 . அதற்கு தலைமை தாங்கியது ஜே .வி.பி.யின் ராேஹன விஜேவீர .
தற்காலத்தில் இந்த அரசாங்கம் தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அதிகார பரவலாக்கம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?தமிழ் மக்கள் உயிரை தியாகம் செய்துபெற்றுக்கொண்ட ஒரு இழப்பீடான மாகாணசபையை வழங்காமல் வைத்துக்கொண்டிருக்கிறீர்களே, உங்களுக்கு வெட்கம் இல்லையா? மாகாணசபை தேர்லை நடத்துமாறு கேட்கும்போது அதனை நடத்தாமல் இருப்பதற்கு பாராளுமன்ற குழுக்களை அமைத்து, அதனை தடுத்து வருகிறீர்கள்.
கறுப்பு ஜூலை கலவரத்துக்கு காரணமாக இருந்தார்கள் என்பதற்காகவே அன்று ராேஹன விஜேவீரவும் ஜே.வி.பி. கட்சியும் தடை செய்யப்பட்டார்கள் என்பதை இந்த அரசாங்கம் மறந்துவிடக்கூடாது. எனவே பழைய விடயங்களை மறந்துவிடுங்கள். மீண்டும் அதனை நினைவுபடுத்தி, அரசியல் லாபம் தேடுவதை நிறுத்திவிடுங்கள். ஜூலை கலவரம் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அரசியல் நியாயத்தை வழங்க தயாரா என்பதை தெரிவிக்க வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அதிகார பரவலாக்கம் மூலம் அரசியல் தீர்வு வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தயார் இல்லை என்பதுதான் உண்மை என்றார்.
![]()