உலகம்

ஈரான் தளபதிகள் யேமன் விரைவு: ஆயுதங்களும் அனுப்பி வைப்பு: பின்னணி என்ன?

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தளபதிகள், மற்றும் ராணுவ ஆலோசகர்களை ஈரான் ,யேமனுக்கு அனுப்பிவைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஏவுகணை, ட்ரோன் சார்ந்த தளவாடப் பொருட்களையும் கடந்த ஜுலை 13 ஆம் திகதி விமானம் மூலம் யேமனுக்கு ஈரான் அனுப்பியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானிய வட்டாரங்கள், யேமனின் செய்தித்துறை அமைச்சர் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஒருவர் ஆகியோர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு இதுகுறித்த விவரங்களை வழங்கியுள்ளனர்.

ஹவுதி அமைப்பினரைப் பலப்படுத்துவதற்கு ஈரான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இது புதிய சான்றாக அமைந்துள்ளது.

‘மஹான் எயர்’ (Mahan Air) நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த விமானத்தில், சிரேஷ்ட தளபதிகள் உட்பட 10 முதல் 21 வரையிலான IRGC அதிகாரிகள் பயணித்ததாக ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விமானம் ஆரம்பத்தில் ஹவுதிக்களின் கட்டுப்பாட்டிலுள்ள தலைநகர் சனாவிற்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், சனா விமான நிலையம் மீது சவூதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கப் படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்த விமானம் செங்கடல் துறைமுக நகரான ஹொடைடாவுக்கு (Hodeidah) திருப்பி விடப்பட்டது.

சனா விமான நிலையத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே, ஹவுதிகள் சவூதி அரேபியா மீது தாக்குதல்களைத் தொடுத்தனர். இது அவர்களின் நீண்டகால மோதலில் நான்கு ஆண்டுகால போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறிப்பதாக அமைந்தது.

அத்துடன், செங்கடலில் சவூதியின் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களுக்குச் சவூதியின் ஆக்கிரமிப்பே காரணம் என்றும் ஹவுதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக ஈரானிய வெளியுறவு அமைச்சிடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் பெறப்படவில்லை. யேமனின் ஹவுதி இயக்கத்திற்கு ஏவுகணைத் தொழில்நுட்பங்களை வழங்கி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தெஹ்ரான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button