இலங்கை

தோண்டத் தோண்ட வருகிறது செம்மணியில் புதிதாக 13 எலும்புக் கூடுகள்;  தலை இல்லாமலும் எலும்புக் கூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் மூன்று சிறுவர்களின் என்பு கூட்டு தொகுதிகள் அடங்கிய நான்கு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

நேற்று,அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடுகள் உட்பட 13 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சில என்புகள் குவியலாக அடையாளம் காணப்பட்டன.அத்துடன் சில என்புக்கூடுகளுக்கு மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற நிலையில் அகழ்வு பணிகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.

நேற்று புதிதாக 13 என்புக் கூட்டுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரை மொத்தமாக 467 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 444 மனித என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வின் போது சில மனித என்புக் கூட்டு தொகுதிகளுக்கு மண்டையோடுகள் இல்லாதது அவதானிக்கப்பட்டுள்ளது.தற்போது அது தொடர்பாக கூற முடியாது.சில என்புக்கூடுகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்போது மண்டையோடுகளும் காணப்படுகிறது.

மனித என்புகளின் ஆய்வுகளின் பின்னரே குவியலில் எடுக்கப்பட்ட மண்டையோடுகள், மண்டையோடுகள் இல்லாமல் எடுக்கப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதிகளுடன் பொருந்துகிறதா என்பது தொடர்பாக தெரிவிக்க முடியும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button