2016 இல் சுரேஷ் சலே சமர்ப்பித்த அறிக்கை… உயர் அதிகாரி ஒருவரின் செயலால் மறைக்கப்பட்ட உண்மை

2016இல், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் நடவடிக்கைகள் குறித்து சுரேஷ் சலே முன்வைத்த அறிக்கையை உயர் அதிகாரி ஒருவர் நிராகரித்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதை எதிர்த்து அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, “சுரேஷ் சலே, 2016 ஆம் ஆண்டில் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்தபோது, இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கை பரப்பப்படும் விதம் குறித்து கவனம் செலுத்தினார்.
சிரிய விமானத் தாக்குதல்
அந்தச் சித்தாந்தங்கள் நாட்டில் எவ்வாறு பரவுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட, ஐ.எஸ் அமைப்போடு தொடர்புடைய இலங்கை நபர் ஒருவர் குறித்து இராணுவப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர், இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சுரேஷ் சலே தயாரித்தார்.
அதற்காக ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். இவை அனைத்தையும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சிவிடம் அவர் சமர்ப்பித்தார்.
இருப்பினும், இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பாக சுரேஷ் சலே செய்த விளக்கமளிப்புகளுக்குப் பாதுகாப்புச் சபையில் உள்ள உயர் மட்ட நபர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
கிறிஸ்தவ தாய்..
இதனை அப்போதைய இராணுவத் தளபதி ஜகத் கிரிஷாந்த டி சில்வா, ஜனக் டி சில்வா ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து சுரேஷ் சலே பாதுகாப்புச் சபையில் முன்வைத்த தகவல்களில் சில குழப்பங்கள்/திரிபுகள் ஏற்பட்டதாக அப்போதைய இராணுவத் தளபதி ஆணைக்குழுவின் முன் தெரிவித்திருந்தார்.
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு மலேசியாவிற்கு அனுப்பப்பட்டார். அது அரசியல் காரணங்களுக்காகவே நடந்தது.
அவ்வாறு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்பட்ட ஒருவரை, ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என்று எவ்வாறு குறிப்பிட முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த உயர் அதிகாரி தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படாத நிலையில், சுரேஷ் சலேவின் தாயார் ஒரு கிறிஸ்தவப் பெண்மணி எனவும், ஈஸ்டர் தாக்குதல் நடந்த அன்று அவரும் தேவாலயத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()