செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்- ஐரோப்பியத் தூதுவர்களிடம் தமிழ்க் கட்சிகள் வலியுறுத்து

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரிடம் தாம் வலியுறுத்தினர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஜெட்விங் விடுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தச் சந்திப்பில், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தளத்தை ஐரோப்பியத் தூதுவர்கள் நேரில் பார்வையிடவுள்ள நிலையில், இது குறித்துத் தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தோம்.
பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் காலத்தில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம், அந்தக் காலப் பகுதியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் யார் என்பதை இனம் கண்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டினோம்.
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே இலகுவாக நடத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளோம். மாகாண சபையில் தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாததால் அரச அதிகாரிகளே நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினோம்.
புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலமும், விவசாய மற்றும் மீன்பிடித்துறைகளை மேம்படுத்துவதன் மூலமும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க முடியும் என்பதால், ஐரோப்பிய நாடுகள் இதற்கான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கோரினோம்.
வட பகுதியில் நிலவும் திண்மக் கழிவு மற்றும் வடிகாலமைப்பு போன்ற பாரிய பிரச்சினைகளை நவீன முறையில் கையாள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் ஐரோப்பியத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்டினோம்.” – என்றார்.
![]()